திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மப்பேடு சமுதாய நலக்கூடம்

மப்பேடு: மப்பேடு பகுதியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் சமூக பொறுப்பு உட்கட்டமைப்பு திட்டம் 2018 - 19ன்படி, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட் டது.

அதன்படி, மப்பேடு சிவன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜை போடப்பட்டது. பின், மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில், கால்நடை மருத்துவமனை அருகே மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன.

ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமான பணிகள், கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. ஆனால், ஓராண்டிற்கு மேல் ஆகியும், இன்று வரை பயன்பாட்டிற்கு வராததால், குப்பை கொட்டும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி உள்ளது. இது, மப்பேடு பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மப்பேடு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை, திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement