கடல் காப்பீடு: இலக்கை நோக்கிய இந்திய பயணம்
உலக வர்த்தகத்தின் பின்னணியில் நம் நாட்டின் அமைதியான, ஆனால், முக்கியமான மாற்றம். சில வாரங்களுக்கு முன் நம் நாட்டில் எடுக்கப்பட்ட, உலக வர்த்தக அமைப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான முடிவுதான் அது. இந்தியாவின் இம்முடிவு, வெளிப்படையாக பார்த்தால் சாதாரண நிர்வாக மாற்றமாக தோன்றலாம். ஆனால், அதன் பின்னணியில் நம் நீண்டகால பொருளாதார இலக்கும் செயல்பாட்டு சிந்தனையும் மறைந்திருக்கிறது. ரஷ்ய கப்பல்களுக்கு கடல் காப்பீடு வழங்கும் மேலும் சில ரஷ்ய காப்பீட்டு நிறுவனங்களை நம் நாட்டின் துறைமுகங்களில் மத்திய அரசு அங்கீகரித்தது. அதற்கு அடுத்ததாக, 'பாரத் மரைடைம் இன்சூரன்ஸ் பூல்' எனப்படும் புதிய கடல் காப்பீட்டு அமைப்பையும் அறிமுகப்படுத்தியது.
சுமார் 150 கோடி டாலர், அதாவது, 14,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு அரசின் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்? இந்த நடவடிக்கை ஏன் அவசியம்? அதை புரிந்து கொள்ள உலக வர்த்தகத்தின் நரம்பு அமைப்பை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரும்பாலான பொருட்கள் கடல் வழியேதான் செல்கின்றன.
அளவின் அடிப்படையில் பார்த்தால் சுமார் 70 சதவீத வர்த்தகமும், மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் 95 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தையே சார்ந்துள்ளன.
அதாவது, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், எல்.என்.ஜி., உரங்கள், தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி செய்யும் பல பொருட்களும் கப்பல்களில்தான் பயணம் செய்கின்றன. ஆனால், இந்த கப்பல்கள் துறைமுகங்களில் நுழைய கடல் காப்பீடு அவசியம். ஏதேனும் விபத்து, சரக்கு சேதம், எண்ணெய் கசிவு அல்லது போர்சூழல் பாதிப்பு ஏற்பட்டால் அதன் நஷ்டத்தை ஈடு செய்யும் அமைப்பே இந்த கடல் காப்பீடு.
ஆதிக்கம் அகலுமா? இதுவரை உலக கடல் காப்பீட்டு துறையில் லண்டன், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய காப்பீட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன.
ரஷ்யா- - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய கப்பல்கள் மற்றும் ரஷ்ய காப்பீட்டு நிறுவனங்களுக்கு மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன. இதனால் உலக கடல் வர்த்தகத்தில் புதிய சிக்கல்கள் உருவாகின.
ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், ரஷ்ய கப்பல்களுக்கு மேற்கத்திய காப்பீடு கிடைக்காத சூழலில், அவை இந்திய துறைமுகங்களுக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான தீர்வாக இந்தியா சில ரஷ்ய காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டு ஆவணங்களை அங்கீகரிக்க தொடங்கியது. இதனால், அந்த நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்ட ரஷ்ய கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் தங்குவதற்கு அனுமதி பெற்றன. இது வெறும் தொழில்நுட்ப மாற்றமல்ல. இந்தியா தனது வர்த்தக ஓட்டத்தை தடையின்றி வைத்திருக்க எடுத்த முக்கியமான முடிவு.
பொதுவாக காப்பீட்டை மக்கள் ஒரு நிதி சேவையாக மட்டுமே பார்க்கலாம். ஆனால், உலக வர்த்தகத்தில் அது ஒரு இலக்கின் கட்டுப்பாட்டு கருவியாக செயல்படுகிறது. காப்பீடு இல்லையென்றால், ஒரு கப்பல் பல துறைமுகங்களில் நுழைய முடியாது. வங்கிகள் அதற்கு கடன் வழங்காது. சரக்குகளை ஏற்றும் நிறுவனங்களும் தயங்கும்.
முக்கியமாக 'வார் ரிஸ்க் இன்சூரன்ஸ்' எனப்படும் போர்ச்சூழல் காப்பீடு மிகவும் முக்கியமானது. உலக அரசியல் பதற்றம் அதிகரித்தால், காப்பீட்டு நிறுவனங்கள் மிக குறுகிய கால அறிவிப்பில் கூட இந்த பாதுகாப்பை திரும்ப பெற முடியும்.
உதாரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி அல்லது செங்கடல் போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் மோதல் அதிகரித்தால், இந்தியாவுக்கு எரிபொருள் கொண்டு வரும் கப்பல்களின் காப்பீடு திடீரென பாதிக்கப்படலாம்.
அப்படியான சூழலில் கப்பல்கள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அதன் தாக்கம் நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எரிபொருள் விலை உயர்வு முதல் தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிப்பு வரை பல விளைவுகள் ஏற்படலாம்.
புதிய இலக்கு இந்த ஆபத்துகளை முன்னரே கணித்த இந்தியா, தனது சொந்த கடல் காப்பீட்டு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. அதுவே 'பாரத் மரைடைம் இன்சூரன்ஸ் பூல்' எனப்படும் பி.எம்.ஐ.பி., இந்த அமைப்பில் பல இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு காப்பீட்டு தொகுப்பை உருவாக்குகின்றன.
சிறிய அளவிலான நஷ்ட ஈடுகளை இந்த நிறுவனங்களும் ஜி.ஐ.சி., ஆர்.இ., நிறுவனத்தின் கையிருப்புகளும் நிர்வகிக்கும். ஆனால், 10 கோடி டாலரை தாண்டி, அதாவது, 960 கோடி ரூபாய் என பெரிய நஷ்டம் ஏற்பட்டால், மத்திய அரசு நேரடியாக உத்தரவாதம் வழங்கும்.
இதன் வாயிலாக இந்தியா உலக கப்பல் நிறுவனங்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்கிறது. “சர்வதேச அரசியல் பதற்றம் ஏற்பட்டாலும், இந்திய வர்த்தக அமைப்பு தொடர்ந்து செயல்படும்” என்பதே அது.
பி.எம்.ஐ.பி., வழங்கும் காப்பீடு பலவிதமான அபாயங்களை கொண்டது. கப்பல் சேதம், சரக்கு இழப்பு, எண்ணெய் கசிவு, போர்ச்சூழல் அபாயங்கள், கடல் மோதல்கள், தடைகள் காரணமாக உருவாகும் நிதி சிக்கல்கள் ஆகியவை அவை.
இதன் வாயிலாக, இந்தியா உலக வர்த்தகத்தில் தனது நம்பகத்தன்மையை உயர்த்த முயற்சிக்கிறது. அன்னிய செலாவணி, வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்திய கடல் காப்பீட்டின் பெரும்பகுதி வெளிநாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டதால், காப்பீட்டு பிரீமியங்கள் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களில் செலுத்தப்பட்டன. அதை மாற்றி, இந்தியா தற்போது அந்த மதிப்பு தொடரில் மேலே ஏற முயல்கிறது.
அதாவது, கப்பல் போக்குவரத்து, காப்பீடு, மறுகாப்பீடு, கடல் சட்ட சேவைகள், வர்த்தக நிதி இவற்றின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே நீண்டகால நோக்கம்.
இன்றைய உலகம் அதிகமாக பிளவுபட்ட அரசியல் சூழலுக்குள் நகர்கிறது. தடைகள், வர்த்தக போர்கள், மண்டல அளவிலான மோதல்கள் போன்றவை உலக வர்த்தகத்தை எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடியவை. இந்த சூழலில், பொருட்களை மட்டும் பாதுகாப்பது போதாது. அவற்றை இயக்கும் நிதி அமைப்புகளையும் காப்பீடு வாயிலாக பாதுகாக்க வேண்டும்.
இதற்கு இந்தியா எடுத்திருக்கும் புதிய முயற்சி, வெறும் காப்பீட்டு திட்டமல்ல. உலக வர்த்தகத்தின் நிதி நரம்புகளை நம் நாட்டிற்கு அருகில் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பெரிய இலக்கை நோக்கிய மாற்றத்தின் தொடக்கம் எனலாம்.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி