40 சதவீதம் வளர்ச்சி கண்ட வேளாண் நகைக்கடன்கள்

புதுடில்லி: வேளாண் நகைக்கடன்களை அதிக அளவுக்கு விவசாயிகள் நாடுவதால் அவை, 40 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளதாக, கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் சில்லரை வேளாண் மற்றும் நகைக்கடன் பிரிவு தலைவர் ஸ்ரீபாட் ஜாதவ் கூறியதாவது:

தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை மட்டுமே கடன் பெற்று வந்த நிலையில், தற்போதோ தங்கம் விலை உயர்வால் 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் எளிதில் கிடைக்கிறது.

நாட்டின் ஒட்டுமொத்த கடன் சந்தையின் அளவு 316 லட்சம் கோடி ரூபாய். இதில் வேளாண் நகைக் கடன்களின் பங்கு 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவற்றுள் பெரும்பாலான கடன்கள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளாலேயே வழங்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் வேளாண் நகைக்கடன்கள் தொடர்பான தெளிவான விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

முன்பெல்லாம், பயிர்க்கடன் பெறவே விவசாயிகள் தங்கள் நிலத்தை அடமானமாக வைக்க வேண்டியிருந்தது. எனவே, வேளாண் நகைக்கடன் விவசாயிகளின் தேர்வாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண் நகைக்கடன் நடைமுறைகள் மிகக்குறைந்த நேரத்திலேயே முடிந்து, உடனே பணம் கிடைக்கிறது வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 - 11 சதவீதம் மட்டுமே; திருப்பி செலுத்தும் நடைமுறையும் எளிது நாட்டின் ஒட்டுமொத்த நகைக்கடன்களில் 65 சதவீதம் கிராமப்புறங்களில்தான் பெறப்படுகிறது.

Advertisement