அதிக பலன் தருவது காப்பீடா, மியூச்சுவல் பண்டுகளா?

நாங்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள். வங்கி, தபால் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வைப்பு நிதி வாயிலாக வட்டி வருமானம் உள்ளது. வங்கி வைப்பு நிதியில் ஏற்கனவே டி.டி.எஸ்., பிடித்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஓய்வூதியம் தரும் அரசாங்க அமைப்பு, படிவம் 16 தருவதில்லை. அதற்காக, போன வருடம் ஜூலை மாதம் வரையில் காத்திருந்தோம். கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் ஏ.ஐ.எஸ்., மற்றும் 26ஏ.எஸ்.,சிலும் எங்களுக்கு ஓய்வூதியம் கொடுத்த தொகையை கணக்கு காட்டவில்லை. நாங்கள் ஐ.டி., ரிட்டர்னில் அளிக்கும் விபரங்களும் ஏ.ஐ.எஸ்.,ஸில் உள்ள விபரங்களும் ஒத்துப்போவதில்லை. இதனால், ரீபண்டு கிடைப்பதில் பிரச்னை வருமா?

ஜெயலக் ஷ்மி, மின்னஞ்சல்

இல்லை, நீங்கள் சரியான விபரங்களை கொடுத்தால் ரீபண்டு தடையின்றி கிடைக்கும். வருமான வரித்துறைக்கு முக்கியமானது, வங்கிகள் பிடித்தம் செய்த டி.டி.எஸ்., விபரங்கள், உங்கள் படிவம் 26 ஏ.எஸ்., - ஏ.ஐ.எஸ்.,சில் சரியாக உள்ளதா என்பது மட்டுமே.

வங்கி வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ்., விபரங்கள் 26 ஏ.எஸ்.,ஸில் துல்லியமாக இருந்தால், உங்களுக்கு ரீபண்டு கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது.

அரசாங்க அமைப்பு படிவம் 16 தரவில்லை என்றாலும், கடந்த நிதியாண்டில் உங்கள் வங்கி கணக்குக்கு வந்த 12 மாத ஓய்வூதிய தொகையை கூட்டுங்கள். உங்களுக்கு 50,000 ரூபாய் வரை நிலையான கழிவு உண்டு.

மொத்த ஓய்வூதிய தொகையிலிருந்து 50,000ஐ கழித்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள தொகையை ஐ.டி.ஆர்.,ரில் 'இன்கம் பிரம் சேலரி (பென்ஷன்)' என்ற பிரிவின் கீழ் நீங்களாகவே தகவல் தர வேண்டும். இப்படி செய்தால், வரி ஏய்ப்பு நோட்டீஸ் வராது.

கருவூல துறையில் இருந்து உங்களுக்கு ஏன் படிவம் 16 வரவில்லை என்பது தனிப்பிரச்னை. அதை அந்த அலுவலகத்தில் போய் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் பான் எண் விடுபட்டிருந்தாலோ, தவறாக இருந்தாலோ இந்த பிரச்னை நேரலாம்.



இன்சூரன்ஸில் முதலீடு செய்வது நன்மையா? மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது நன்மை பயக்குமா?

ஆர்.கே.கே. ரங்கசுவாமி, சேலம்.

காப்பீடும் முதலீடும் வேறு வேறு பிரிவுகள். ஒன்று உங்கள் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு, குடும்ப நலனுக்காக செய்யப்படும் ஒரு சின்ன முன்னேற்பாடு. இரண்டாவது, உங்கள் எதிர்கால நிதி தேவைகளை கருத்தில் கொண்டு செய்யப்படும் வளர்ச்சிக்கான கருவி.

பிரச்னை எங்கே வருகிறது என்றால், 'காப்பீட்டை நான் பயன்படுத்தவே இல்லை, அல்லது அதற்கான தேவை என் வாழ்க்கை முழுக்கவே ஏற்படவில்லை என்றால், கட்டிய பிரீமியம் தொகை வீணாகத்தானே போகிறது? யாரோ அனுபவிப்பதற்கு பதில் அதை நானே திரும்ப பெற்றால் என்ன?' என்ற கேள்விகள் எழும்போதுதான். அதனால், முதலீடும் காப்பீடும் கைகோர்த்துக் கொள்கின்றன.

இவ்விரண்டு பிரிவுகளின், கடந்த 30 ஆண்டுகால வருவாய் ஈட்டும் திறனை பார்க்கும் போது, மியூச்சுவல் பண்டு முதலீடுகள் கூடுதல் லாபத்தை ஈட்டி தந்திருப்பது தெரிகிறது. அதில் கட்டணங்கள் தெளிவானவை. காப்பீடு பிளஸ் முதலீட்டு திட்டங்களில் கட்டணங்கள் அதிகம். ஈட்டிய வருவாயும் குறைவு.

காப்பீட்டையும் முதலீட்டையும் தனித்தனியே வைத்துக்கொள்வது தான் உத்தமம்.



மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,யில் நீண்ட கால முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். அந்த 'நீண்ட காலம்' என்பது எத்தனை ஆண்டுகள்?

ராதிகா வரதராஜன்,

வளசரவாக்கம்.

இது தொடர்பாக சமீபத்தில் ஓர் ஆய்வு வெளிவந்திருக்கிறது. அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்த பலரும் பெரிய அளவு லாபத்தை பார்க்கவில்லை என்பதால், மியூச்சுவல் பண்டு பக்கமே வருவதற்குப் பலருக்கும் தயக்கம் இருக்கிறது.

இந்த ஆய்வின்படி, குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தொடர்ந்து எஸ்.ஐ.பி., போட்டு வந்தால், நிச்சயம் கூடுதல் லாபம் பார்க்க முடியும் என்பது உறுதியாகிறது. கடந்த 30 ஆண்டுகால பங்குச்சந்தை தரவுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த முடிவு தெரிய வருகிறது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால், எட்டு ஆண்டுகள் எஸ்.ஐ.பி., போட்டு வந்திருந்தால், ஆண்டு சராசரி லாபம் அதிகபட்சம் 36 சதவீதமும் குறைந்தபட்சம் 3.03 சதவீதமும் கிடைத்திருக்கும். இதையே 15 ஆண்டுகள் போட்டு வந்திருந்தால், குறைந்தபட்சம் 7.30 சதவீதமும், அதிகபட்சம் 18.18 சதவீதமும் ஆண்டு சராசரி லாபம் கிடைத்திருக்கும்.

எட்டு ஆண்டுக்கு மேல் எஸ்.ஐ.பி., போட்டு வந்தால், நிச்சயம் நஷ்டம் இல்லை, லாபம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். இப்படி பாருங்கள், மாதந்தோறும் 10,000 ரூபாய், 15 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.பி., போட்டு வந்திருந்தால், நீங்கள் முதலீடு செய்தது, 18 லட்சம். 18.18 சதவீத ஆண்டு சராசரி லாபம் கிடைத்திருந்தால், 15 ஆண்டுகள் முடிவில் பெறக் கூடிய தொகையோ, 93.78 லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட 5.2 மடங்கு. ஆனால், இது எதுவுமே சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதே.



என் மகனது இரண்டாண்டு மேற்கல்விக்காக பொதுத்துறை வங்கியில் கல்விக்கடன் வாங்கியுள்ளேன். வட்டி பகுதியை மட்டும் கட்டும்படி, வங்கி கோருகிறது. இது சரியா?

எம்.பி. பாலசுந்தர்,

கல்மண்டபம்.

அவ்வாறு வங்கிகள், கேட்கக்கூடாது; அது கட்டாயமில்லை. அதாவது, உங்கள் மகன் கல்வியை முடித்துவிட்டு வந்த பின்னர், 6 மாதமோ, ஓராண்டோ மார்டோரியம் காலம் கிடைக்கும். அதன் பின்னர் அவர் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த தொடங்க வேண்டும். இந்த விஷயத்தில், கல்விக்கடன் தொகையோடு, அதற்கான வட்டியும் சேர்ந்து விடும்.

உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறீர்கள் என்றால், வட்டி மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கு சற்றே கூடுதலாக சேரும். உங்கள் மகன் இ.எம்.ஐ., கட்ட ஆரம்பிக்கும் போது, அந்த வட்டியும் அசல் தொகையோடு சேர்ந்து 33 லட்சம் ரூபாயாக இருக்கும். அவர் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ., தொகை அதிகமாக இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டே, ஒரு சில வங்கிகள், வட்டியை மட்டும் முன்னதாகவே செலுத்தும்படி கேட்கின்றன.

Advertisement