அடிப்படை வசதிகள் இன்றி ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அவதி :ஆறு ஆண்டுகளாக முடியாத கடைகள் அமைக்கும் பணி
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி வாரச்சந்தை வளாகத்தை தினசரி கடைகளாக பயன்படுத்துவதால் குவியும் குப்பை வாரச்சந்தை நாளில் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
ஆண்டிபட்டி வாரச்சந்தை திங்கட்கிழமையில் நடக்கிறது. தேனி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் 250க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைக்கின்றனர். காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இதில் பல லட்சம் மதிப்பில் ஆடுகள் வியாபாரம் நடக்கிறது. ஆண்டிபட்டி பேரூராட்சி, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். வாரச்சந்தை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ரூ.6 கோடி மதிப்பில் 257 கடைகளுடன் துவக்கப்பட்ட வார சந்தை கட்டிடம் ஆறு ஆண்டுகளாகியும் முழுமை பெற வில்லை. வாரச்சந்தைக்கு முதல் நாளே வியாபாரிகள் பலரும் வந்து தங்குகின்றனர். சந்தை முடிந்தபின் கடைகளை அப்புறப்படுத்தி செல்ல இரவு 10:00 மணி ஆகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் வாரச்சந்தை வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இன்றி வியாபாரிகள், பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகுகின்றனர்.
துர்நாற்றம் வீசுகிறது
காமாட்சி, வியாபாரி:
வாரச்சந்தையில் 20 ஆண்டிற்கும் மேலாக வியாபாரம் செய்கிறேன். வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் சேதமடைந்துள்ளன. பல வியாபாரிகள் மழை, வெயிலுக்கு தற்காலிக கூடாரம் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். கடைகள் அமைக்கும் பகுதிய முன்கூட்டியே பேரூராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்வதில்லை. வாரச்சந்தை பகுதியை தினசரி வியாபாரிகள் பயன்படுத்துவதால் குப்பை, காய்கறி கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகின்றன. கடைகள் அமைக்க கட்டணம் வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இடத்தை சுத்தம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. தைப் பொங்கலுக்கு விற்பனையாகாத கரும்புகள், கழிவுகளை 5 மாதமாகியும் அப்புறப்படுத்தவில்லை. இரவில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி அசுத்தம் செய்கின்றனர். குளியலறை, பொதுக்கழிப்பறை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
மழைகாலத்தில் சுகாதாரம் பாதிப்பு
அறிவழகன், வடுகபட்டி: சமீபகாலமாக வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார பாதிப்பு அதிகமாகிறது. தேனி மாவட்டத்தில் மற்ற ஊர்களில் வாரச்சந்தை வியாபாரிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆண்டிபட்டி வாரச்சந்தையில் கழிப்பறை, தெருவிளக்கு, வடிகால் வசதிகள் இல்லை. மழை பெய்தால் குப்பையுடன் மழை நீர் சேர்ந்து பலருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. வாரச்சந்தை வளாகத்தில் பல இடங்கள் புதர் மண்டி உள்ளது.வாரச்சந்தை வியாபாரிகளின் பிரதிநிதிகளுடன் பேரூராட்சி நிர்வாகம் ஆலோசித்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றார்.
மேலும்
-
அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி: காங் - எம்பி மாணிக்கம் தாகூர் ஆவேசம்
-
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா: அரசு விளக்கம்
-
வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல செயல்திட்டம் அமைச்சர் ஆதவ் உறுதி
-
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு ரத்தா? சி.பி.எஸ்.இ., மறுப்பு
-
விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி