'கடவுள் சொத்தை திருடியவர்கள் தப்ப முடியாது': சபரிமலை தங்கம் விவகாரத்தில் அமைச்சர் அதிரடி

10

திருவனந்தபுரம்: ''சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், கட்சி பாகுபாடு இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைது



இது தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


எனினும், முந்தைய இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, குறிப்பிட்ட சில நபர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால், இந்த விவகாரம் கேரள அரசியலில் பூதாகரமாக வெடித்தது.



இந்நிலையில், கேரளாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சதீஷன் தலைமையிலான காங்., அடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, சபரிமலை விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.


இது குறித்து, தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் நேற்று கூறியதாவது: கடவுளின் சொத்தை யார் திருடி இருந்தாலும் அவர்களை சும்மா விட மாட்டோம். அது யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


நடவடிக்கை



குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் நடவடிக்கைகள் தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.


சுகாதாரத் துறையையும் கவனிக்கும் முரளிதரன், ''எபோலா வைரஸ் பரவலால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. கேரளா முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.''வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement