விட்டால் ரோட்டின் நடுவே கடை விரித்து விடுவார்கள் போலிருக்கிறது! குறிச்சி குளக்கரை ரோட்டில் விபத்து அபாயம்

கோவை: குறிச்சி குளக்கரை ரோட்டில் 15 அடி வரை ஆக்கிரமித்து, இரும்பு பொருட்கள், மார்பிள் கற்கள் உள்ளிட்ட பொருட்கள் பரப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இப்பொருட்களை அகற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரும்பு கிரில், ரேக், இரும்பு பெட்டிகள், ரப்பர் ஷீட், பழைய பொருட்கள் விற்கும் கடைகள், ரோட்டை 15 அடி அகலத்துக்கு ஆக்கிரமித்து பொருட்களை பரப்பியுள்ளன. ஆக்கிரமிப்பால் சாலையோரம் ஏற்கனவே சுருங்கியுள்ள நிலையில், அவ்வப்போது லாரிகளில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்குவதும் உண்டு.

இது விபத்துக்கு வழிவகுக்கின்றன. வாகன ஓட்டிகள் இப்பகுதியை ஒரு வித அச்சத்துடன் கடக்க வேண்டியிருக்கிறது.

அ.தி.மு.க., ஆட்சியின்போது, ரோட்டை அளந்து, கரையில் இரும்பு தடுப்புகள் நிறுவப்பட்டன. வருவாய்த்துறை மூலமாக தேசிய நெடுஞ்சாலைத்துறையால் அளந்து வரிசையாக எல்லை கற்கள் நடப்பட்டன. இப்போது அகற்றப்பட்டு உள்ளன.

ஆக்கிரமிப்பாளர்களால் எல்லை கற்கள் பிடுங்கப்பட்டது குற்றம். அவர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடுக்க வேண்டும். அவ்விடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அளந்து, ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்.

அரசின் சொத்தை அபகரித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இனி ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்கிற அச்சம் ஏற்படும்.

@block_B@

'ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்'

தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சோழவளத்தானிடம் கேட்டதற்கு, ''குறிச்சி குளக்கரை பிரிவில் இருந்து பொங்காளி அம்மன் கோயில் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த இடம் எதுவரை இருக்கிறது என வருவாய்த்துறை மூலமாக அளவீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் அறிவித்ததும் பணிகள் நின்றன. வருவாய்த்துறை மூலமாக அளந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். எல்லை கற்கள் நட்டு, விடுபட்ட இடங்களில் இரும்பு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.block_B

Advertisement