இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்

திருப்போரூர்: திருப்போரூர் தபால் நிலையம் இட நெருக்கடியில் செயல்படுவதால், பொதுமக்கள், அலுவலர்கள் அவதிப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு, தபால் அலுவலர், உதவியாளர், தபால்காரர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தபால் நிலையம், அதை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

நெருக்கடியான இடத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தில், மக்கள் நிற்பதற்கு கூட இடமில்லை.

இதனால், அங்கு வரும் பொது மக்கள் பணம் செலுத்துதல், எடுத்தல், புதிய கணக்கு தொடங்குதல், தபால் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளை பெற சிரமப்படுகின்றனர்.

இட நெருக்கடியால், தபால் நிலையம் வருவோர் திரும்பி சென்று, மீண்டும் மக்கள் கூட்டம் குறைந்ததும் வர வேண்டிய நிலை க்கு தள்ளப்ப ட்டுள்ளனர்.

அதேபோல், இந்த தபால் நிலையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததாலும் பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஆர்வலர் செந்தில்வேல் என்பவர் கூறியதாவது:

திருப்போரூரில் செயல்படும் தபால் நிலையம் குறுகிய இடத்தில் செயல்படுகிறது.

திடீரென 20 நபர்கள் அங்கு வந்தால், பணிகள் அனைத்தும் தேக்கமடைகின்றன. அலுவலர்களும் திணறுவர். தபால் அனுப்புதலுக்கு படிவத்தை பூர்த்தி செய்ய கூட நிற்பதற்கு இடமில்லை.

மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் தாமதமாகின்றன. போதிய டெலிவரி ஊழியர்கள் இல்லாததால், பார்சல்கள் அனுப்புவதில் பணி சுணக்கம் ஏற்படுகிறது. டெலிவரி ஊழியர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement