பத்து அறப்பணிகள்... இனி பசுமை பூரிக்கும்! கால் நுாற்றாண்டு கடந்தாலும் 'வெற்றி'யின் கால் ஓயாது
திருப்பூர்:ஒரு விதை மண்ணில் விழுந்து, வேர்விட்டு, விஸ்வரூபமாய் ஆலமரமாக வளர்ந்து நிற்பதைப் போன்றதுதான் 'வெற்றி' அறக்கட்டளையின் 25 ஆண்டு காலப் பயணமும்.
கால் நுாற்றாண்டுக்கு முன்பு, 'ஆண்டிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு' என்ற பெயரில் ஒரு சிறிய நதியாய் தங்களின் இயற்கைச் சேவையைத் தொடங்கிய இந்த அமைப்பினர், காலப்போக்கில் 'வெற்றி' என்ற பெயரில் மாபெரும் இயக்கமாக உருவெடுத்தனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறண்டு கிடந்த குளங்களைத் துார்வாருவது, குட்டைகளைச் சீரமைப்பது, கான்கிரீட் காடுகளுக்கு நடுவே மரக்கன்றுகளை நட்டு சோலைவனமாக்குவது என இவர்களின் சேவைக்கரங்கள் ஓயாமல் உழைத்து வருகின்றன.
தற்போது தனது 25-வது வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'வெற்றி' அறக்கட்டளை, தனது சூழலியல் பணிகளைத் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்னும் ஆழமாகவும், கூடுதல் கவனத்தோடும் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கோடு, புதிதாக 10 பிரத்யேகத் துணைக் குழுக்களை உருவாக்கிப் புதியதோர் வரலாற்றைத் தொடங்கியுள்ளது.
இந்த எதிர்காலப் பெரும் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று பெரியாண்டிபாளையம் பாராடைஸ் காம்ப்ளக்ஸ் கற்பக விநாயகர் அரங்கில் நடைபெற்றது. தலைவர் சிவராம் தலைமையில் கூடிய நிர்வாகிகள், அடுத்து வரும் தலைமுறைக்காகத் நாம் செய்ய வேண்டிய இயற்கை சார்ந்த கடமைகள் குறித்து விவாதித்தனர்.
ஒட்டுமொத்தமாகப் பசுமைப் பணிகளைச் செய்வதை விட, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கவனம் செலுத்த வேண்டும் என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அனுபவமிக்க இயக்குனர்கள் தலைமையில், தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட 10 துணைக் குழுக்கள் நேற்று முறைப்படி அமைக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகளும் அர்ப்பணிப்பு உணர்வோடு நியமிக்கப்பட்டனர்.
இயற்கை காக்க 10 கட்டளைகள்
ஏற்கனவே 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற உன்னதத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்து, இவர்களின் மரம் வளர்ப்புச் சேவைத் தாரக மந்திரமாக ஓங்கி ஒலித்து வருகிறது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது உருவாக்கப்பட்டுள்ள 10 துணைக் குழுக்களும் பின்வரும் 10 அறப்பணிகளைத் திருப்பூர் மண்ணில் விதையாகத் துாவப் போகின்றன:
வனம் வளர்க்கும் மரம் வளர்ப்புப் பணி; மண்ணைக் காக்கும் நஞ்சில்லா இயற்கை வேளாண்மை; தாகம் தீர்க்கும் ஆறு, குளம், குட்டைகள் பராமரிப்பு; நிலத்தடி நீரைப் பெருக்கும் மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு - மறுபயன்பாடு; வாயில்லா ஜீவன்களுக்கான மாடுகளின் மரபுவழி நாட்டு வைத்தியம்; எதிர்காலத் துாண்களான பள்ளி பசுமைப் படைகளுக்கான விழிப்புணர்வுக் குழு; பிஞ்சுகளின் நெஞ்சில் இயற்கை அறிவை விதைக்கும் வாராந்திர சூழலியல் பாடம்; அரசுப் பள்ளிகள் தோறும் மாணவர்களின் மதிய உணவிற்கான சத்துமிகு 'காய்கறித் தோட்டம்' அமைத்துத் தருதல்; பள்ளித் தோட்டங்களை முறையாகப் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்; இளந்தலைமுறையின் சிந்தனையைத் தூண்டும் ஆண்டுதோறும் சூழலியல் இலக்கியப் போட்டிகள்.
ஆம்... மண்ணைக் காக்கப் புறப்பட்ட இந்த 10 பசுமைப் படைகளின் பயணம், திருப்பூரின் வரலாற்றில் புதியதொரு இயற்கை வசந்தத்தை எழுப்பும் என்பதில் ஐயமில்லை!
'வெற்றி' அறக்கட்டளை சூழலியல் சேவை பணிகள் மேம்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம், பெரியாண்டிபாளையம் தனியார் அரங்கில், தலைவர் சிவராம் தலைமையில் நேற்று நடந்தது.
@block_B@ எதிர்காலச் சந்ததியினரிடம் பசுமை விதை துாவ திட்டம்
கடந்த 25 ஆண்டு காலமாக இந்த மண் சார்ந்த, இயற்கை சார்ந்த பணிகளை 'வெற்றி' அமைப்பு ஒரு தவம் போலச் செய்து வருகிறது. இனிவரும் காலங்களில், இந்தச் சேவை மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்னும் வீரியமாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 குழுக்களுக்கும் திறமையான நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். இனி இந்த இயக்கம் ஒரு சில தனிநபர்களை மட்டும் சார்ந்து இயங்காமல், ஒரு ஒருங்கிணைந்த பெரும் கூட்டு அமைப்பாகச் செயல்படும். ஒட்டுமொத்தமாகப் பசுமைப் பணி என்று சொல்லாமல் மரம் வளர்ப்பு, நீர்நிலை பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு என ஒவ்வொரு நுணுக்கமான வேலைக்கும் தனித்தனி கவனமும், முக்கியத்துவமும் தரப்படும். குறிப்பாக, நம் கண்முன்னே வளரும் எதிர்காலச் சந்ததியினரிடம் பசுமைச் சிந்தனையை விதைக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளி குழந்தைகளை மையப்படுத்தி மூன்று பிரத்யேகக் குழுக்களை அமைத்துள்ளோம். இன்று நாம் செய்யும் இந்தச் சூழலியல் சேவை, எதிர்காலத்தில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டுமானால், அதற்கு நம் மாணவச் செல்வங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம் என்பதை நாங்கள் ஆழமாக உணர்ந்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் தகுந்த வழிகாட்டுதலோடு, இந்த அத்தனை அறப்பணிகளும் இனிதே தொடரும். - சிவராம், தலைவர், 'வெற்றி' அறக்கட்டளை.block_B
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி