இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி: இபிஎஸ் விமர்சனம்
சென்னை: ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: மதுரை கீழமாத்தூரில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் தவெகவினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில் ரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழகம் ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement