இந்தியாவின் இரண்டாம் அபாய சாலை தொப்பூர்: டிரைவர்களுக்கு சிவப்பு வர்ண விபத்து எச்சரிக்கை

1

தர்மபுரி: இந்தியாவின் இரண்டாவது அபாயகர சாலையான தொப்பூர் கணவாய் பகுதியில், சாலை விபத்துக்களை தடுக்க, டிரைவர்களை எச்சரிக்கும் வகையில், புதிய சாலையில் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில், 12 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில், 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க, தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி, 905 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.

இந்த பணி, 2028 மார்ச் மாதம் முடிந்து, பயன்பாட்டுக்கு வர உள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கணவாய் பகுதியிலுள்ள, 8 கி.மீ., சாலையில் வாகனங்களின் வேக வரம்பை எச்சரிக்கும் வகையில், 20 இடங்களில், 'சோலார் பிளிங்கர் லைட்' அமைக்கப்பட்டுள்ளது. இது இரவில் அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு, தானியங்கி மூலம் எச்சரிக்கை விடுத்து, 30 கி.மீ., வேகத்தில் இயக்க அறிவுறுத்தும்.

இது மட்டுமின்றி, தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில், 35 இடங்களில் மின்சாரத்தால் இயங்கும், 'பிளிங்கர் லைட்' பொருத்தப்பட்டுள்ளன. சாலை நடுவே ஆங்காங்கே வாகனத்தின் வேக வரம்பு, 30 கி.மீ., என, குறிப்பிட்டு மஞ்சள் வர்ணத்தில் வரையபட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, 'ரெட் டேபிள் டாப்' சிவப்பு நிற விபத்து எச்சரிக்கை வர்ணம் சோதனை அடிப்படையில், கணவாய் பகுதி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் வளைவில், 600 மீட்டருக்கு வரையப்பட்டுள்ளது. இதுபோன்ற சமிக்ஞை, இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சாலையில் உள்ளது.

இரண்டாவது இடமாக தொப்பூர் சாலையில் கையாளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வாயிலாக, 'இது அபாயகரமான விபத்து ஏற்படும் சாலை' என்பது, ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கையாக அறிவுறுத்தப்படுவதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement