கர்நாடக முதல்வர் மாற்றமா? சித்தராமையாவுக்கு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு

2

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை டில்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்து இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அப்போது, டிகே சிவகுமார், சித்தராமையா இடையே முதல்வராவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் சித்தராமையா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு, இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

டிகே சிவக்குமாரை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அனால் நான் தான் ஆண்டுகளுக்கு முதல்வர் என்று சித்தராமையா கூறி வருகிறார்.

தற்போது காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் சித்தராமையாவை டில்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. டிகே சிவகுமாரை முதல்வராக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது; என்னை டில்லிக்கு வருமாறு அழைத்துள்ளார்கள். நாளை காலை 11 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. என்ன நோக்கத்திற்காக இந்த அழைப்பு என்று எனக்குத் தெரியாது. வேணுகோபால்என்னைத் தொடர்புகொண்டு தேதி மற்றும் நேரத்தைத் தெரிவித்தார். முதல்வர் பதவி குறித்த ஊகங்கள் இங்கு எப்போதும் இருக்கத்தான் செய்யும், எனக் கூறினார்.

Advertisement