அதிமுக.,வில் வேலுமணி கோஷ்டியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா! தவெக.,வில் ஐக்கியம்

34

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கோஷ்டியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நேற்று திடீரென தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆளும் கட்சியான த.வெ.க.,வில் ஐக்கியமாகினர். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., 59; அ.தி.மு.க., 47 தொகுதிகளிலும் வென்றன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் ஐந்து; இந்திய கம்யூ., - மார்சிஸ்ட் கம்யூ., - வி.சி.க.,- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், தே.மு.தி.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

தே.மு.தி.க.,வை தவிர, தி.மு.க., கூட்டணி கட்சிகள், த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்தன; அக்கட்சி ஆட்சி அமைத்தது.

காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்கள், வி.சி.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டசபையில், த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடந்த போது, பா.ம.க., நடுநிலை வகித்தது.

அ.தி.மு.க.,வில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் என, இரண்டு அணியாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்தனர். வேலுமணி அணி ஆதரவால், 144 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சரவையில், வேலுமணி தரப்பு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சேர்த்து கொள்ளப்படவில்லை.

இதனால், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் விரக்தி அடைந்தனர். சிலர் பழனிசாமி பக்கம் செல்லத்துவங்கினர்.

இந்நிலையில், அ.தி.மு.க.,வில் வேலுமணி அணியில் இருந்த, மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமா ஆகியோர், நேற்று பிற்பகல் தலைமை செயலகம் வந்தனர்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறைக்கு சென்றனர். அங்கு மூன்று பேரும், தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர்.

அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்தார். மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தற்போது நான்கு தொகுதிகள் காலியாகி உள்ளன. சட்டசபை பணிகள் துவங்கும் முன்பே, தேர்தலில் வெற்றி பெற்ற, 21 நாளில், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மூவரும், உடனே த.வெ.க.,வில் இணைந்தனர். இது, த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த, வேலுமணி தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் ஐந்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைய பேச்சு நடந்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இது, தமிழக அரசியல் வட்டாரத்தில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

@block_B@ அமைச்சர் அறையில் அடையாள அட்டை: எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மரகதம், ஜெயகுமார், சத்யபாமா ஆகியோர், ஜார்ஜ் கோட்டையில் இரண்டாவது தளத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றனர். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மூவருக்கும் த.வெ.க., உறுப்பினர் அடையாள அட்டையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அவரது அறையில் ஒரு மணிநேரம் காத்திருந்த மூன்று பேரும், முதல்வர் விஜய் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர். தலைமை செயலகத்தில் தன் அறையில் வைத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கியதை, பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன.block_B

@block_Y@ கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி த.வெ.க.,வுக்கு தேவையில்லை

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள த.வெ.க.,வுக்கு தற்போது, 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தனிப்பெரும்பான்மைக்கு, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. தற்போது நான்கு தொகுதிகள் காலியான நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு, 116 எம்.எல்.ஏ.,க்கள் போதும். அதற்கு, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே, த.வெ.க.,வுக்கு தேவை. அந்த வகையில், வெளியிலிருந்து ஆதரவு தரும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றாலும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவோடு, தனிப்பெரும்பான்மையை நிருபிக்கும் நிலைக்கு, த.வெ.க., முன்னேறி உள்ளது. இன்னும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தலில் த.வெ.க., அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற்று விடும். அதை நோக்கியே, அக்கட்சி தலைமை நகர்ந்து வருவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. block_Y

@block_P@ அ.தி.மு.க., பலம் சரிவு

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 47 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், அக்கட்சியின் பலம், 44 ஆக குறைந்துள்ளது.block_P

@block_G@ 'அரவணைப்பது ஆபத்தாகும்'

'அ.தி.மு.க.,விலிருந்து விலகி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ள மூவரை, த.வெ.க., அரவணைப்பது ஆபத்தாகும்' என, அக்கூட்டணியில் உள்ள வி.சி.க., விமர்சித்துள்ளது. இதுகுறித்து, வி.சி.க., பொருளாளர் பாலாஜி வெளியிட்ட அறிக்கை: மூன்று எம்.எல்.ஏ.,க்களின் செயல் அறமற்றது. அவர்களை த.வெ.க., அரவணைப்பது ஆபத்தாகும். தாங்கள் உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவோம் என, த.வெ.க., முன்வைத்த கூற்றுக்கு எதிரானது. இவை, அக்கட்சிக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத அச்சுறுத்தலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.block_G

Advertisement