சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?: உதயநிதி கேள்வி

30

சென்னை: 'இது தமிழகமா, உ.பி.,யா; எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப்படை' என, முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: மாற்றம் மாற்றம் என சொன்னவரின் ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மாறி இருக்கிறது. கோவை சூலுார் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை நடந்திருக்கிறது. சூலுார் சிறுமியின் தாய்க்கு சொல்லாமல், அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டு இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். கோவையில் இளம்பெண் வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

முதல்வரின் தொகுதியான பெரம்பூரில், 13 வாகனங்களின் கண்ணாடியை உடைத்து, போதை கும்பல் அட்டூழியம் செய்துள்ளது. இது, தமிழகமா, உ.பி.,யா; எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?

அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால், பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, கண் துடைப்புக்காக போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழகத்தின் கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement