கேள்விக்குறி அரசு பள்ளி இல்லாததால் மாணவர்கள் கல்வி நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு எப்போது
மானாமதுரை,மே 26-
மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,இளையான்குடியில் அரசு ஆண்கள்,மகளிர் மேல்நிலைப் பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் உயர்கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. இந்நிலையில் மானாமதுரையில் மகளிருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் இப்பகுதியில் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1 படிக்க அரசு மேல்நிலை பள்ளி இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதேபோன்று இளையான்குடி நகர் பகுதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தால் இப்பகுதியை சேர்ந்த மாணவர்களும் 20 கிலோமீட்டர் துாரம் சென்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை நீடிப்பதால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது.
முத்தநேந்தல் கிருஷ்ணன் கூறியதாவது:
மானாமதுரையை சுற்றி 150 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பிற்காக மானாமதுரை வந்து செல்கின்றனர். மானாமதுரையில் ஆண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில் 10ம் வகுப்பு வரை மானாமதுரை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் இவர்கள் பிளஸ் 1 படிப்பதற்காக மானாமதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைக்காட்டூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று இளையான்குடி பகுதி மாணவர்களும் முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும், மானாமதுரை தொகுதி த.வெ.க.,எம்.எல்.ஏ., இளங்கோவனும் மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.