பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தடுக்க வேண்டும்:  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை 

திண்டிவனம்: எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த இரண்டு வாரங்களுக்குள் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது நாடு முழுதும் மக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வரை லிட்டருக்கு 105.31 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 2.46 உயர்ந்துள்ளது. அதே போல் டீசல் 2.57 ரூபாய் உயர்ந்து 99.55 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் தொடர்ந்து பலமுறை எரிபொருள் விலை உயர்த்தப்படுவது சாதாரண மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து செலவு உயர்வதால் காய்கறி, மளிகை, பால், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களிலும் இந்தியாவில் அதற்கேற்ப விலை குறைக்கப்படவில்லை என்பது மக்களிடையே நீண்டநாள் குற்றச்சாட்டாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதோடு, பொது போக்குவரத்துக் கட்டண உயர்விற்கும் இந்த நிலை வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

எனவே,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் மீதான அதிகப்படியான கலால் வரி மற்றும் செஸ் வரிகளை குறைக்க வேண்டும்.

எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி விலை உயர்த்தும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் தீவிரமடையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement