இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பொன்னேரி: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், குடியிருப்பு மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

மீஞ்சூர் ஒன்றியம் ஏருசிவன் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. தொட்டியின் துாண்களில் விரிசல்கள் ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன. மேலும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, வெளியே தெரிகின்றன.

கடந்த 2012ல் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தொடர் பராமரிப்பின்றி போனதால், தற்போது சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், அருகே வசிக்கும் குடியிருப்பு மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement