மலேஷிய விமானத்தில் அடிதடி தகராறு: போதை பயணியர் போலீசில் ஒப்படைப்பு

சென்னை: மலேஷியா புறப்பட்ட விமானத்தில், மது போதையில் அடிதடி தகராறில் ஈடுபட்ட பயணியர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் இருந்து மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும், 'ஏர் ஏசியா - 3' பயணியர் விமானம், மே 24 இரவு 11:45 மணிக்கு 186 பயணியருடன் புறப்ப ட்டது .

பயணியர் இருக்கையில் அமர்ந்திருக்க விமானம் ஓடுபாதையில் ஓட துவங்கியது. அப்போது மலேஷிய நாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார், 35, பிரசாந்த், 36, ஆகியோர், சட்டையை பிடித்து சண்டையிட்டுள்ளனர்.

இதை பார்த்த பணிப்பெண்கள் வந்து, அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அருகில் இருந்த பயணியர் முயன்றும் இருவரும் கூச்சலிட்டப்படி, ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். அப்போது, இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையிலும் இருந்துள்ளனர்.

இதையடுத்து, விமான பணி பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கோரினார். இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் ஏறி இரு பயணியையும் வலுக்கட்டாயமாக இறக்கினர்.

அவர்களது பயணமும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக, நேற்று அதிகாலை 1:10 மணிக்கு, 184 பேருடன் விமானம் கோலாலம்பூர் புறப்பட்டது. மது போதையில் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரும் விமான நிலைய போலீசாரிம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து விமான நிலைய போலீசார் கூறியதாவது:

தமிழகத்தை ச் சேர்ந்த இரண்டு பயணியரும், சில ஆண்டுகளுக்கு முன், மலேஷியாவுக்கு சென்றுள்ளனர். அங்கே மலேஷிய குடியுரிமை பெற்றுவிட்டனர். அவர்களின் சொந்த ஊரில் நடந்த திருமண விழாவுக்காக, தமிழகம் வந்துள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement