கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் குறித்து தனி கவனம் செலுத்தி கட்டுப்படுத்தப்படும் :வடக்கு மண்டல ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு உறுதி

1

விழுப்புரம்: 'கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்தி, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என வடக்கு மண்டல ஐ.ஜி., பிரவீன்குமார்அபினபு உறுதியளித்தார்.

வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன்குமார் அபினபு, நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், விழுப்புரம் சரக போலீஸ் உயரதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அந்தந்த மாவட்டங்களின் நிலவரங்களைக் கேட்டறிந்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை, பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்னைகள் குறித்து, விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் சரக பகுதிகளில் கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுவதால், தனி கவனம் செலுத்தி அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருள்கள் ரயில்கள் மூலமாகவும், லாரிகள் வழியாகவும் கடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அதனையும் கண்காணித்து தடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் மீது, ஏற்கனவே நடவடிக்கை எடுத்து, கைதும் செய்யப்பட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள், செயின் பறிப்பு போன்றவைகள் தனிப்படைகள் மூலம் கண்காணித்து தடுக்கப்படும்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆலோசனையும் வழங்கப்படும். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, அதற்கான சட்டப் பிரிவுகள், கடும் தண்டனைகள் குறித்து விளக்கியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு காவல் படை மாநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் விழுப்புரம் சரகத்திலும், அனைத்து மாவட்டங்களில், குறிப்பாக நகர பகுதியில் தொடங்கப்படும்.

இவ்வாறு ஐ.ஜி., கூறினார்.

டி.ஐ.ஜி., அருளரசு, எஸ்.பி., சாய்பிரனீத் உடனிருந்தனர்.

Advertisement