மே 4ல் ஸ்டாலின் கூறியதற்கும் இன்று அவர் பேசுவதற்கும் சம்பந்தமில்லை; சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

8

நமது நிருபர்

''சட்டசபை தேர்தல் முடிவு வெளியான மே 4-ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எங்களிடம் கூறியதற்கும், இன்று அவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது,'' என, ராஜபாளையம் அருகே சேத்துாரில் நடந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.

சேத்துார் பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்லப்பிள்ளை படத்திறப்பு, புத்தக வெளியீட்டு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: ஆட்சி மாறினால் கட்சி மாறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கட்சி மாறுவதில்லை. தற்போது ஒரு கட்சியில் எம்.எல்.ஏ., ஆகிவிட்டு மறுநாளே வேறு கட்சியில் இணையும் அவலம் நிகழ்கிறது.

அ.தி.மு.க., தி.மு.க., இல்லாமல் புதியவர் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆளுங்கட்சிக்கு எதிரான மனப்போக்கு மக்களிடையே இருந்ததை எங்களாலும் கணிக்க முடியவில்லை.
தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க த.வெ.க.,விற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். இல்லையெனில் இன்று ஆளுநர் ஆட்சி இருந்திருக்கும். இந்த அரசு எந்த விதமான பொருளாதாரத்தை கடைபிடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

தற்போது பயிர் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில வருத்தமும் இருக்கலாம். சிலர் கம்யூனிஸ்ட்கள் விலகி விடுவர் என கூறுகின்றனர். மக்கள் நலன் சார்ந்து எங்கள் முடிவு இருக்கும். தேர்தல் முடிவு வெளியான மே 4 ல் புதிதாக ஆட்சி அமைப்பவர்களுக்கு ஆறு மாதம் அவகாசம் அளிப்போம். செயல்பாட்டை பொறுத்து விமர்சிப்போம் என ஏற்கனவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் அன்று சொன்னதற்கும் இன்று அவர், தி.மு.க., தலைவர்களின் பேச்சுகளுக்கும் சம்பந்தமில்லை. தினசரி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டுகளை 15 நாட்களாக அமைதியாக உள்ளோம். முதல் முறையாக பதவி ஏற்ற போது மறைந்த முதல்வர் பதவிக்கு அண்ணாதுரையும் கருணாநிதியும் புதியவர்கள் தான். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்.

Advertisement