இசக்கி சுப்பையா ராஜினாமா ஏற்பு: அறிவித்தார் சபாநாயகர்

14


நமது சிறப்பு நிருபர்




அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தட்டச்சு செய்து கொண்டு வந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், கைப்பட எழுதி கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் இசக்கி சுப்பையா. இவர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.2011-ம் ஆண்டு முதன்முறையாக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் சில சர்ச்சைகளில் சிக்கியதால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2 மாதங்களிலேயே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து 2016 தேர்தலில் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த முருகையா பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இசக்கி சுப்பையாவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

பின்னர் 2019 மக்களவை தேர்தலின் போது டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த அவர், 2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியினரை சந்தித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் நீக்கினார். இந்நிலையில் இன்று (மே 26) அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக கடிதம் கைப்பட எழுதப்படவில்லை எனக் கூறி, சபாநாயகர் கடிதத்தை ஏற்க மறுத்தார். பிறகு இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி கொடுத்த நிலையில் அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.



எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசச்கி சுப்பையா பின்னர் பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்றார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் முறைப்படி இணைந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி;

தொகுதி மக்களின் நலன்கருதி அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தேன். எம்எல்ஏவாக இருந்து என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடிந்தது. வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

என் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற காரணத்தால் ஆளும்கட்சியான தவெகவில் இணைந்துள்ளேன். முதல்வரையும் பார்த்து எனது கோரிக்கைகளை சொல்லி உள்ளேன். நிச்சயமாக நல்லது செய்து தருவோம் என்று உறுதி அளித்துள்ளனர். வேறு எந்த காரணமும் இல்லை. முதல்வரின் சிறப்பான ஆட்சியை கடந்த 15 நாட்களில் கண்டுள்ளேன்.

இவ்வாறு இசக்கி சுப்பையா கூறினார்.




@block_B@

காலக்கெடு விதிக்க முடியாது!

நிருபர்களிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: எனக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது. ராஜினாமா கடிதம் முறையாக வழங்கப்பட்டால் அதை ஏற்பது என் கடமை. இபிஎஸ் தரப்பு மனு குறித்து சட்டமன்ற விதிகளின்படி உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும். எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதில் எனது முடிவே இறுதியானது. அதிமுகவினர் வாதங்களை பொருட்படுத்த தேவையில்லை. சட்டசபை விதிகளுக்கு உட்பட்டு நான் செயல்படுவேன். இவ்வாறு சபாநாயகர் கூறினார்.block_B

Advertisement