ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்கணுமா: முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி

37

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி,இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா எனக்கேள்வி எழுப்பி உள்ளார்.


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பெற்ற கடனை தள்ளுபடி செய்து, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, குறு விவசாயிகளுக்கு, 5,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை, சிறு விவசாயிகளுக்கு, 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரை, அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு ஏற்ப, தள்ளுபடி கிடைக்கும். இந்த திட்டத்தை அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் விமர்சித்து இருந்தார்.


இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது,5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.


ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.


இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Advertisement