ராயபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய தம்பதி கைது
சென்னை: ராயபுரம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திய தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தேவராஜ், 35; ஸ்டீல் பட்டறை ஊழியர். இவரது மனைவி கீதா, 29. தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த கீதா, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டார். இம்மாதம் 15ல், அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உதவ யாரும் இல்லாததால், அதே மருத்துவமனையில் அறிமுகமான ரோஸ்மேரி, 29, என்பவர், நான்கு நாட்களாக கீதாவை பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் கீதா, நேற்று முன்தினம் 2:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது கணவர் வேலைக்கு சென்றதால், வீட்டிற்கு ஆட்டோவில் செல்லலாம் என, மருத்துவமனையின் வெளியே குழந்தையுடன் ஆட்டோவிற்காக காத்திருந்தார்.
அப்போது, குழந்தையை வாங்கிய ரோஸ்மேரி, 'நீ சென்று ஆட்டோ அழைத்து வா' என கூறியுள்ளார். கீதா, ஆட்டோவுடன் வருவதற்குள், ரோஸ்மேரி குழந்தையுடன் மாயமானது தெரிய வந்தது. ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை போலீசாரிடம் கீதா புகார் அளித்தார்.
போலீசார், அப்பெண்ணின் மொபைல் போன் எண்ணை வைத்து, 'ட்ராக்' செய்ததில், பள்ளிக்கரணையில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்ற போலீசார், கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த ரோஸ்மேரி, அவரது கணவரான தாமஸ் என்கிற சங்கர், 35, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
ரோஸ்மேரிக்கு ஏற்கனவே திருமணமாகி கர்ப்பமாகி உள்ளார். அப்போது, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியின் வயிற்றில் உதைத்ததில் கர்ப்பம் கலைந்துள்ளது. இதில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஆத்திரத்தில் ரோஸ்மேரி குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின், இரண்டாவதாக தாமசை திருமணம் செய்துள்ளார்.
குழந்தை பெற்றெடுக்கவோ தத்தெடுக்கவோ முடியாததால், மருத்துவமனையில் குழந்தையை திருடி வளர்க்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தம்பதியை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஐந்து மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை, டாக்டர்கள் பாராட்டினர்.
சங்கர் ரோஸ்மேரி