தாம்பரம் மாநகராட்சியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை குரோம்பேட்டையில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

குரோம்பேட்டை: தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் அவதியடைந்துள்ள பெண்கள், காலி குடங்களுடன் நேற்று, ஜி.எஸ்.டி., மற்றும் திருநீர்மலை சாலைகளில், மறியலில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி, 27வது வார்டு, குரோம்பேட்டை, கோதண்டம் நகர் பகுதிக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து பாலாற்று குடிநீரை பெற்று, மாநகராட்சி வினியோகிக்கிறது.

இப்பகுதிக்கு வழக்கமாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும். இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் திருநீர்மலை சாலையில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள், போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் திருநீர்மலை சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதேபோல், செம்பாக்கம் மண்டலம் சிட்லப்பாக்கத்திற்கு, 13 நாட்களாக குடிநீர் வரவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது குழாய் உடைந்துள்ளதாக கூறினர். வெயிலின் தாக்கத்தால், இப்பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

தற்போது மாநகராட்சி வழங்கும் குடிநீரும் வராததால், சிட்லப்பாக்கம் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகளில், வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது. அதிலும், 15 - 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறது.

நிறைய இடங்களில், கேபிள் புதைக்க பள்ளம் தோண்டிய போது, குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர். அதனால், பல இடங்களில் தண்ணீர் வரவில்லை.

கோதண்டம் நகர் மக்கள் கூறுகையில், '10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் அவதிக்கு உள்ளாகி உள்ளோம்; பணம் கொடுத்து குடிநீர் வாங்குகிறோம். மாநகராட்சி அதிகாரிகள், இப்பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்' என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பாலாறு படுகை, மேலசீவரம் பகுதியில் பிரதான குழாயில் ஏற்பட்ட பழுது, நான்கு நாட்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. பின் தண்ணீரை பம்ப் செய்தபோது அதே இடத்தில் மீண்டும் கசிவு இருப்பது தெரிந்தது.

அதை சரிசெய்ய மேலும் இரண்டு நாட்கள் ஆனது. இப்பிரச்னை முடிந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வழக்கத்தைவிட குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. இனி வழக்கமான குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement