ஈரானுடன் நிரந்தர போர் நிறுத்தம் வருமா-? குறைந்து வரும் உலக நாடுகளின் நம்பிக்கை!

3

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையேயான போருக்கு விரைவாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகளை இரு தரப்பின் செயல்பாடுகள் குறைத்துக் கொண்டே வருகின்றன.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் மற்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்க நடந்த முதல்கட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இரு தரப்பிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழல் நெருங்கி விட்டதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை குறைக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஈரானின் செயல்பாடுகள் தற்போது அமைந்துள்ளன.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ' ஈரானுடன் நல்லதொரு உடன்பாட்டை எட்ட அமெரிக்கா விரும்புகிறது. இல்லையென்றால், வேறு வழியில் இவ்விவகாரத்தை கையாள வேண்டியிருக்கும்' என ஈரானை எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார். இது அமைதி பேச்சில் முட்டுக்கட்டை போடும் விதமாக இருந்தது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் உடனான ஒப்பந்தத்தில் அவசரப்பட வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இரு தரப்பும் தகுந்த நேரம் எடுத்துக் கொண்டு, அமைதி ஒப்பந்தத்தை சரியான முறையில் வடிவமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் விடுத்துள்ள அறிக்கையில், ' பல தலைப்புகளின் கீழ் பேச்சு நடத்தப்பட்டு வந்த போதிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

'அதற்காக நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சூழலுக்கு நெருங்கிவிட்டதாக அர்த்தமல்ல ' என தெரிவித்திருப்பது அமைதி ஒப்பந்தம் மீதான எதிர்பார்ப்பை மேலும் குறைத்துள்ளது.

போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்காவின் முடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், சர்ச்சைக்குரிய அணுசக்தி விவகாரங்கள் குறித்து தற்போது விவாதிக்கவில்லை எனவும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு இரு தரப்பிடையே முரண்பாடுகள் நீடித்து வருவதால், போர் முடிவுக்கு வரும் என்பதிலும், அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

Advertisement