உயர் அதிகாரிகளுக்கு இனி மின்சார வாகனங்கள் புதிய மாற்றம் ! லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவு
- நமது டில்லி நிருபர் -
மேற்காசிய போர் பதற்றத்துக்கு மத்தியில், எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக, பார்லி.,யில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவுப்படி, மின்சார வாகனங்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. மேற்காசிய பிராந்தியத்தில், ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலால், நம் நாடு உட்பட உலகளவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், நம் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், டீசலின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நாட்டின், 80 சதவீத எரிபொருள் தேவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால், அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 11 நாட்களில் மட்டும், பெட்ரோல், டீசல் விலையை நான்கு முறை உயர்த்தி உள்ளன. வணிக காஸ் சிலிண்டரின் விலையும் கூட அதிகரிக்கப்பட்டு உள்ளது.
முன்னுதாரணம் இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க, 'எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்கக்கூடாது' என, நாட்டு மக்களை பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டுக்கொண்டார். இதற்கு முன்னுதாரணமாகவும் அவர் செயல்பட துவங்கினார்.
எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக, தன் கான்வாயில் இடம்பெறும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை, 50 சதவீதம் வரை பிரதமர் மோடி குறைத்தார்.
இதை பின்பற்றி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தனர்.
மேலும், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களும் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை தொடர்ந்து, பார்லி.,யிலும் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும் முயற்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இறங்கிஉள்ளார்.
பார்லி., உயர் அதிகாரிகளுக்கு, பெட்ரோலில் இயங்கும் அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை வழங்கும்படி அவர்உத்தரவிட்டார்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
பார்லி., இணை செயலர் ஒருவர் இரு ஆண்டுகளாக பெட்ரோலில் இயங்கும் காரை பயன்படுத்தி அலுவலகத்துக்கு வந்த நிலையில், சமீபகாலமாக, 'மஹிந்திரா எக்ஸ்.யு.வி., 400' மின்சார காரை பயன்படுத்தி அலுவலகத்துக்கு வருகிறார்.
எதிர்பார்ப்பு மேலும், பல உயர் அதிகாரிகளுக்கும் பெட்ரோல் கார்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்கள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதனால், 'பச்சை நிற நம்பர் பிளேட்' கொண்ட பல வாகனங்கள் பார்லி., வளாகத்திற்குள் தென்பட துவங்கியுள்ளன.
கார்களை பெறும் தகுதியுள்ள பார்லி.,யின் அனைத்து உயர் அதிகாரிகள் அனைவருக்குமே, இனி மின்சார வாகனங்கள் தான்.
அதிகாரிகள் வகித்து வரும் பதவி மற்றும் அதிகாரப்பூர்வ தேவைகளை பொறுத்து, 'மஹிந்திரா எக்ஸ்.யு.வி., 400, டாடா நெக்ஸான் ஈ.வி.,' ஆகிய இரண்டு மாடல்களில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, இணை செயலர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள 40 அதிகாரிகள், புதிதாக மின்சார வாகனங்களை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பார்லி.,யில் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பார்லி., பிரதான கட்டடத்திற்கும், நிலைக்குழு கூட்டங்கள் நடக்கும் இணைப்பு கட்டடத்திற்கும் இடையே, எம்.பி.,க்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கு, கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவை மாற்றப்பட்டு, 'பேட்டரி'யால் இயங்கும் கோல்ப் வண்டிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
வாசகர் கருத்து (1)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
26 மே,2026 - 03:49 Report Abuse
இப்பொழுதாவது விழித்தார்களே ... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement