சேத்துாரில் காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள்
சேத்துார்: ராஜபாளையம் அருகே சேத்துார் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் நிலத்தில் சாய்ந்து இழப்பு ஏற்பட்டதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேத்துார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிலம்பனேரி, பிராவடிக் கண்மாய், நடுவக் குளம், வாழவந்தான் கண்மாய்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பாசனம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து கண்மாய் ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது. ஏற்கனவே கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் புகையான் நோய் தாக்குதலும் ஏற்பட்டு இருந்த நிலையில் வீசிய காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிப்பிற்கு உள்ளானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தரப்பில்: ஏற்கனவே நெல் கதிர் விடும் பருவத்தில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கண்மாய்களில் நீர் இருப்பும் குறைந்தது. அத்துடன் பயிர்களில் புகையான் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதை சமாளிக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சமாளித்து தற்போது அறுவடை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்றினால் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து விட்டன. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.