ஓட ஓட விரட்டி இளைஞருக்கு வெட்டு பட்டப்பகலில் மதுராந்தகத்தில் பயங்கரம்
மதுராந்தகம்: முன்விரோதம் காரணமாக, இளைஞரை மூவர் கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம், மதுராந்தகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வாலிபருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன், 26. அதே பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவருடைய வீட்டில் இருந்த சப்போட்டா மரத்தின் இலைகளை, குபேந்திரனின் ஆடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்., 9ம் தேதி, குபேந்திரனுக்கு ஆதரவாக கோபிநாத், 36, சச்சின், 15, ஆகியோர் காஞ்சனாவிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது இருதரப்பு பிரச்னையாக மாறவே, காஞ் சனாவின் மருமகன் சுமன், 24, மற்றும் சந்தோஷ், 48 ஆகியோரை, குபேந்திரன் கிரிக்கெட் பேட்டால் தாக்கியுள்ளார்.
இது குறித்த புகாரை அடுத்து, சித்தாமூர் போலீசார் குபேந்திரனை கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
ஒரு மாதத்திற்கு பின் ஜாமினில் வெளிவந்துள்ள குபேந்திரன், கருங்குழி அடுத்த மேட்டு காலனி பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்து, சித்தாமூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில், குபேந்திரன் ஜாமினில் வெளிவந்துள்ளதை அறிந்த சுமன் மற்றும் சந்தோஷ் ஆகியோர், குபேந்திரன் செல்லும் பகுதிகளை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
நேற்று காலை 9:00 மணியளவில் கருங்குழி ரயில்வே மேம்பாலம் அருகே குபேந்திரன் பைக்கில் வருவதை அறிந்து, சுமன், சந்தோஷ் மற்றும் சுமனின் அக்கா மகன் கென், 19, ஆகியோர் பட்டாக்கத்திகளுடன் காத்திருந்தனர்.
இவர்களை பார்த்ததும், குபேந்திரன் தப்பி யோட முயல, ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குபேந்திரனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சுமன், சந்தோஷ் ஆகியோரை கைது செய்து போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபரை தேடி வருகின்றனர்.