ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த த.வெ.க., ஒன்றிய செயலர்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் புதிதாக கட்டப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது மட்டும் இல்லாமல், எம்.எல்.ஏ., இருக்கையில் ஒன்றிய செயலர்களை மாறி மாறி அமர வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் 88 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் இ- -- சேவை மையம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
இதை, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா முன்னிலையில், ஸ்ரீபெரும்புதுார் த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அலுவலக திறப்பு விழாவின் போது, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய செயலர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்தார். இது, அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து, குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியிலும் ஒன்றிய செயலர்கள் இருவர் பங்கேற்றனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., அறைக்கு சென்று, அதிகாரிகள் முன்னிலையில் ஒன்றிய செயலர்களான பார்த்திபன் மற்றும் சங்கர் ஆகிய இருவர்களை மாறி மாறி, எம்.எல்.ஏ., இருக்கையில் அமர வைத்தது பெரும் பேசும் பொருளானது.
மேலும், திறப்பு விழாவிற்கு வந்திருந்த 500க்கும் மேற்பட்ட த.வெ.க., தொண்டர்கள், மொத்தமாக அலுவலகம் உள்ளே நுழைய முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறினர். கூட்ட நெரிசலில் சிக்கி அதிகாரிகள், தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பினால் போதும் என்று வெளியேறினர்.
பொதுவாக அரசு கட்டட திறப்பு விழாவில், அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, ரிப்பன் வெட்டி திறந்து வைப்பது வழக்கம்.
ஆனால், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழாவில், மக்களால் தேர்தெடுக்கப் படாத, அரசியல் கட்சியைச் சார்ந்த பிரதிநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது அதிகார துஷ்பிரி யோகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.