டாஸ்மாக் கடைகள், பார்கள் முடிந்து மூடியதை போட்டோ எடுக்கும் பணிகள் போலீசார் மனக்குமுறல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் முடிந்து மூடப்பட்டதை போட்டோ எடுத்து அனுப்பும் பணியும், அதை உறுதி செய்ய சிறிது நேரம் கழித்து மீண்டும் நேரில் சென்று சரிபார்த்து மறுபடியும் போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு இரவுப்பணி போலீசார் அனுப்ப வேண்டியுள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் மொத்தம் 172 டாஸ்மாக் கடைகள் செயல் படுகிறது. இவற்றில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே விதிகளை மீறி செயல்பட்ட 42 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.

தற்போது 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளில் இரவு 10:00 மணிக்கு மேல் நடக்கும் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனையை தடுப்பதற்காக அந்தந்த பகுதிகளில் போலீசார் கடைகள், பார்கள் முடிந்து மூடப்பட்டதை போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப தெரிவிக்கப்பட்டது.

இதனால் அந்தந்த ஸ்டேஷன் எல்கைக்குட்பட்ட பகுதியில் இரவு 9:45 மணிக்கே போலீசார் டாஸ்மாக், பார் இரண்டும் இரவு 10:00 மணிக்கு மூடிய பின் சூடன் கொளுத்தும் வரை இருந்து உறுதி செய்து போட்டோ எடுத்து அனுப்புகின்றனர்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து இரவுப்பணியில் உள்ள போலீசார் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு வந்து சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை பார்த்து மீண்டும் இரவு 10:00 மணிக்கு மேல் போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர்.

டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு தொடர்ந்து போலீசார் இரவில் சென்று வரும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் மற்ற ரோந்து பணியை செய்ய முடியாமல் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உயர் அதிகாரிகள் நல்ல பெயர் எடுப்பதற்காக இரவு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கூடுதல் பணி கொடுத்து பணிச்சுமையை ஏற்படுத்துவதாக விரக்தி அடைந்துள்ளனர்.

மேலும் தேர்தலின் போது மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்டு ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பிரசாரம் செய்து தற்போது இரவில் போலீசாரை பணியில் ஈடுபடுத்துவதாக த.வெ.க., அரசின் மீது போலீசாருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Advertisement