ஆண்டிபட்டியில் குடிநீர் பிரச்னை புதிய போர்வெல் அமைக்க நிதி இல்லை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆண்டிபட்டியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து புதிய போர்வெல் அமைக்க திட்ட மதிப்பீடு செய்தும், நிதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகம் கையை விரித்ததில் மக்கள் அல்லல் பட்டு வருகின்றனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெரிய தும்மகுண்டு ஊராட்சியை சேர்ந்தது ஆண்டிபட்டி. இந்த ஊருக்கு குடிநீர் பெரிய தும்மகுண்டுவிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. பகிர்மான குழாய்கள் அடிக்கடி பழுதாவதால் தண்ணீர் வினியோகம் தடைபட்டு வந்தது. போர்வெல்லிலும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய போர்வெல் அமைத்து குழாய்கள் பதிக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஊராட்சியில் இதற்கான நிதி இல்லை.

ஊராட்சி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் போதுமான நிதி இல்லை என்று பணி செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டது.

கிராமத்தில் உள்ள போர்வெல்லிலும் போதுமான தண்ணீர் கிடைக்காததாலும், குடிநீருக்கும் பிரச்னையாக இருப்பதாலும் மக்கள் தண்ணீரை தேடி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆண்டிபட்டி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

Advertisement