போக்குவரத்துக்கு இடையூறு தரும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் திருச்சி ரோட்டில் நடுரோட்டில் நிறுத்தப்படும் கார்கள், வாகனங்களுடன், ரோட்டின் நடுவில் உள்ள மின் கம்பம், டிரான்ஸ்பார்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்களிடையே வலுத்து வருகிறது.

திண்டுக்கல் - திருச்சி ரோடு வடமாவட்டங்களை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் பாலமாக அமைத்துள்ளது. இதன் வழியே மக்கள் அதிகம் வந்து செல்லும் நிலையில் வாகன நெரிசல் அதிகளவில் உள்ள பகுதியாகவும் உள்ளது. யூனியன் கிளப் முதல் கல்லறைத் தோட்டம் சிக்னல் சந்திப்பு வரை இடது புற ரோடு ஆக்கிரமிப்பில் உள்ளது. நடுரோட்டில் ஒரு டிரான்ஸ்பார்மர் ,5 மின்கம்பங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரை அகற்றி மாற்று இடத்தில் மின் வழிதடத்தை கொண்டு செல்வதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமோ எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது. நடு ரோட்டில் மின் கம்பங்கள் உள்ளதால் இதை பயன்படுத்தி ஒவ்வொரு மின் கம்பத்திற்கு இடையே கார்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகரித்துள்ளது.

நடு ரோட்டில் கார்கள் இந்த ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு காரில் வரும் வாடிக்கையாளர்கள் கார்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விடுகின்றனர்.

இதனால் திண்டுக்கல் முதல் திருச்சி செல்லும் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கனரக, சிறிய ரக சரக்கு வாகனங்கள் அந்த இடத்தை கடப்பதற்குள் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.

காலை, மாலை நேரத்தில் நெரிசல் அதிகமாக உள்ளது. இதை தங்களது சுயநலத்திற்காக காவல் துறை, மாநகராட்சி நிர்வாகம், நெடுங்சாலைத்துறை கண்டுக்காது மவுனம் காக்கிறது.

போக்குவரத்து நெருக்கடி ஏங்கல்ஸ், ஆசிரியர் , திண்டுக்கல்: எங்கள் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள், சிறு வியாபாரிகள் தினமும் நகர் பகுதி, திருச்சி ரோடு சீலப்பாடி வரை சென்று வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல் கல்லறைத் தோட்டம் வரை வாகன நெருக்கடி உள்ளது.

இடதுபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் மின்கம்பங்கள், சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும். இதனால் கூடுதல் இடம் கிடைக்கும் நிலையில் வாகனங்களும் எளிதாக கடந்து செல்ல முடியும். மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஆக்கிரமிப்புக்களை அகற்றி மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரையும் மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.

Advertisement