இன்று ஈரோடு மாநகராட்சி கூட்டம்; மாறிய அரசியல் களத்தால் பெரும் எதிர்பார்ப்பு

ஈரோடு:தமிழக அரசியல் களம் அடியோடு மாறிவிட்ட நிலையில், இன்று நடக்கும் ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 60 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., கவுன்சிலர்கள், 48 பேர் உள்ளனர். சுயேட்சை கவுன்சிலர்கள் இருவர் தி.மு.க.,வில் இணைந்து விட்டனர். அ.தி.மு.க.,வில் ஆறு கவுன்சிலர்கள், காங்.,ல் மூன்று, ம.தி.மு.க.,வில் ஒரு கவுன்சிலர் உள்ளனர். மேயராக தி.மு.க.,வின் நாகரத்தினம், துணை மேயராக தி.மு.க.,வின் செல்வ

ராஜ் உள்ளனர். நான்கு மண்டலங்களின் தலைவர்களும் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்.அ.தி.மு.க., உட்கட்சி பூசலால், முன்னாள் அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர்களான, 31வது வார்டு ஜெகதீசன், 48வது வார்டு தங்கவேல், 15வது வார்டு ஹேமலதா, த.வெ.க.,வில் இணைந்து விட்டனர். 43வது வார்டு காங்., கவுன்சிலர் சபுராமாவின் கணவர் ஜாபர் சாதிக், சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே த.வெ.க.,வில் இணைந்தார். தேர்தலுக்கு பிறகு காங்., கட்சியே த.வெ.க.,வுடன் கைகோர்த்து விட்டது.
இதனால் காங்., கவுன்சிலர்கள் மூவரும், தவெகவுக்கு குரல் எழுப்புவர். தி.மு.க.,வில் இணைந்த, 28வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் இறந்து விட்டதால், அந்த இடம் காலியாக உள்ளது. தற்போதைய நிலையில் த.வெ.க.,வுக்கு ஆதரவாக, காங்., மற்றும் கட்சியில் இணைந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் என ஆறு பேர், குரல் கொடுக்க உள்ளனர். இந்நிலையில்தான் தேர்தல் முடிந்து, ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் இன்று (26ம் தேதி) நடப்பதாக, கமிஷனர் அர்பித் ஜெயின் அறிவித்துள்ளார். கூட்டத்தில், 152 தீர்மானங்கள் கொண்டு
வரப்படவுள்ளன.த.வெ.க., அரசு ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மாநகராட்சி தி.மு.க., வசம் உள்ள நிலையில், மேயர், துணை மேயர், அக்கட்சி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று, பல்வேறு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு இணைப்புகள் வழங்குவது, உயர்த்தப்பட்ட சொத்து வரி குறைப்பு தொடர்பான சிறப்பு தீர்மானம், வரி விதிப்பிற்கான அபாராத தொகையை உயர்த்துவது போன்றவற்றில், கவுன்சிலர்களின் விவாதம் எந்த மாதிரி இருக்கும் என்பதும், அனைத்து தரப்பு மக்கள் மத்தியில், ஆர்வத்தை
ஏற்படுத்தியுள்ளது.

Advertisement