பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை முன்னேற்ற சிறப்புப் பயிற்சி: கலெக்டர் அறிவுரை    

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில், 2025–26ம் கல்வி ஆண்டு பொதுத்துத்தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவர்களை, உடனடி துணை தேர்வில் பங்கேற்கச் செய்து, தேர்ச்சிபெற வைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, முக்கிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெற பயிற்சியளித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, அந்தந்த பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள் குறித்து, கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. 

மேலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி பெறாததற்கான காரணம், கற்றலில் பின் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு சரியாக வருகை புரியாத மாணவர்களும், தேர்ச்சியடையும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் அமைந்திடுவதோடு, பாடவாரியாக ஆசிரியர்கள் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும், கட்டாயம் உயர்கல்வி பயின்றிடும் வகையில் கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுமட்டுமின்றி, நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்திடும் வகையில், மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு பயிற்சி வகுப்புகள், வாராந்திர தேர்வுகள், குறுந்தேர்வுகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து நடத்திடவும், கற்றல் குறைபாடுடைய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கற்றலில், தேர்ச்சிக்கான முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Advertisement