ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

15

வாஷிங்டன்:ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதையோ அல்லது வைத்திருப்பதையோ நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானுடனான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., இறுதியில் துவக்கின. போர் உச்சத்தை எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்தத்துக்காக கடந்த மாதம் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடந்த முதற்கட்ட பேச்சு தோல்வி அடைந்தது. இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும், புதிய அணுசக்தி பேச்சை தொடங்கவும் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் ஒருபோதும் அணு ஆயுதமோ அல்லது குண்டோ வைத்திருக்காது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி தடையற்ற கப்பல் போக்குவரத்திற்காக, சுங்கக் கட்டணங்கள் இன்றி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.

ஏதேனும் கண்ணிவெடிகள் இருந்தால், அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்படும்.
எங்களின் மாபெரும் நீருக்கடியில் இயங்கும் கண்ணிவெடி அகற்றும் கப்பல்களைக் கொண்டு, இதுபோன்ற பல கண்ணிவெடிகளை நாங்கள் வெடிக்கச் செய்து அகற்றியுள்ளோம். எஞ்சியிருக்கும் கண்ணிவெடிகளை ஈரான் உடனடியாக அகற்ற வேண்டும். எங்களின் அற்புதமான மற்றும் முன்னெப்போதும் இல்லாத கடற்படை முற்றுகையால் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்கள், போக்குவரத்து மீண்டும் துவங்கும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement