உரிமம் முடிந்த குவாரி பள்ளங்களை மூடுங்க!

சிவகாசி, மே 29 -

மாவட்டத்தில் உரிமம் முடிந்த கிரானைட், கல் குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் மூடப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி உயிர் பலிகள் ஏற்படுகிறது. எனவே பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் கனிமம், சுரங்கம், சிறுவகை கனிமங்கள் துறை சார்பில் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார் ராஜபாளையம், அருப்புக்கோட்டை திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் இயங்குகின்றது. இவ்வாறு இயங்குகின்ற குவாரிகளில் கற்களை எடுப்பதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோணடப்படுகிறது. அவ்வாறு தோண்டப்பட்ட பள்ளங்களை குவாரியின் உரிமம் முடிந்த பின்னர் மூடுவதில்லை. உரிமம் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு பெரும்பான்மையான குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகின்றது. இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீருக்காக செல்லும்போது தவறி விழுந்து இறந்து விடுகின்றது. தவிர இயற்கை உபாதைக்கு செல்பவர்களும் விபரீத அறியாமல் தண்ணீர் உள்ளது என குளிக்க செல்பவர்களும் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

கடந்த காலங்களில் சிவகாசி பகுதியில் குவாரியில் குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இரு வாரத்திற்கு முன்பு சகோதர சிறுவர்கள் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்தனர். சமீபத்தில் அருப்புக்கோட்டையில் கல்குவாரி கிடங்கில் குளிக்க சென்ற நபர் மூழ்கி இறந்தார்

சிவகாசி அருகே திருத்தங்கலில் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் கிரானைட் குவாரி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த குவாரியின் உரிமம் ஓராண்டுக்கு முன்பு முடிந்து விட்டது. ஆனால் இங்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் மூடப்படவில்லை. இதேபோல் செல்லை நாயக்கன்பட்டி , செங்கமலப்பட்டி ரோடு, நதிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் மூடப்படவில்லை. எனவே இது போன்ற குவாரிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement