புதிய மாவட்ட செயலாளர் பக்கம் வந்தால் ‘பதவி’ ‘ஆபர்’ கொடுத்து அழைக்கும் மாஜி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., நிர்வாகிகள் குழப்பம்
வானுார்: ‘அ.தி.மு.க.,வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் பக்கம் வந்தால் பதவி வழங்கப்படும்’ என, ஆபர் கொடுத்து அழைக்கும் மாஜி எம்.எல்.ஏ.,வால் வானுார் ஒன்றிய நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபையில், பொதுச்செயலாளர் உத்தரவை மீறி, த.வெ.க., வுக்கு ஆதரவு தெரிவித்ததால், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சி.வி.சண்முகம், வேலுமணி தரப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பதவிகளை பழனிசாமி அதிரடியாக பறித்து, புதிய நிர்வாகிகளை நியமித்தார். அதில், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சண்முகம் நீக்கப்பட்டு, பசுபதி நியமிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த மாஜி அமைச்சர் சண்முகம், விழுப்புரம் மாவட்டத்தை தனது ஆதரவாளர்களுடன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரை வேலுமணி மற்றும் அவரது தரப்பினர் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பசுபதிக்கு, பலர் நேரடியாகவும், சிலர் இலைமறை காயாகவும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவரும் பதவி கிடைத்த கையோடு, ஒவ்வொரு ஒன்றியத்திலும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி, கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகிறார். வரும் ஜூன் 1ம் தேதி வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மாஜி எம்.எல்.ஏ., சக்கரபாணி, தன்னுடைய ஆதரவாளர்கள், மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ‘புதிய மாவட்ட செயலாளருக்கு ஆதரவு அளியுங்கள், நீங்கள் கேட்கும் பதவி உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகளை செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள்’ என ஆசை வார்த்தை கூறி ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.
இருப்பினும், பொதுச்செயலாளர் பழனிசாமி பக்கம் நம்பி போகலாமா, மாஜி அமைச்சரை தொடரலாமா அல்லது த.வெ.க.,விற்கு தாவலாமா என, வானுார் ஒன்றிய நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.