டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் உள்ள, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையொட்டி முதல்வர் விஜய் கோவில்கள், கல்வி நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து 500 மீ., தொலைவில் உள்ள, 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில், 2539 எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு செல்வதற்கு 150 மீ., முன்பு துவக்கப்பள்ளி உள்ளது. மேலும் இந்த டாஸ்மாக் கடையில் இருந்து, 400 மீ., தொலைவிற்கு புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தமிழக அரசு அறிவித்தபடி துவக்கப் பள்ளிக்கு, 150 மீ., தொலைவில் உள்ள, இந்த டாஸ்மாக் கடை இதுவரை அகற்றப்படவில்லை.

இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் உள்ள, டாஸ்மாக் கடையை அகற்ற, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement