முருகன் கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேனி:வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் முருகன் கோயில்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் திரண்டனர். தேனி என்.ஆர்.டி நகர் உள்ள சிவ கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், தீர்த்த தொட்டி ஆறுமுகநாயனார் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வீரபாண்டி கவுமாரி சேவா சங்கம் சார்பில் பொதுமக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். பால்குட ஊர்வலம் காலை 8:00 மணிக்கு கவுமாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கி முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு வந்தது. பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் முருகன், வள்ளி ,தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியின் தரிசனம் பெற்றனர். போடி பரமசிவன் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.