மீஞ்சூரில் மின்வெட்டை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்

மீஞ்சூர்:மீஞ்சூரில், மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக, வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகி வீணாவதால், குடியிருப்பு மக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் பேரூராட்சி, அண்ணாமலை நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்ளகாக, இப்பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. சீரற்ற மின் அழுத்தம், அடிக்கடி மின்வெட்டு போன்ற காரணங்களால், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான குடியிருப்பு மக்கள், நேற்று மீஞ்சூர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் வினியோகம் பாதிப்பு குறித்து புகார் அளித்தும், மின் வாரிய அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை. தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என, அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மீஞ்சூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். அதை ஏற்று, குடியிருப்பு மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement