கால்நடைகள் உயிரிழப்பு சந்தை விலையில் நிவாரணம் :அமைச்சரிடம் விவசாயிகள் மனு

திருப்பூர்: 'திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய, சந்தை மதிப்பின் அடிப்படையில் நிரந்தர இழப்பீடு வழங்க வேண்டும்' என பி.ஏ.பி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி மற்றும் நிர்வாகிகள், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலியை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:



கடந்த, 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ள தெருநாய்களின் தாக்குதலால் ஆடு, மாடுகள் உயிரிழந்து விவசாயிகளுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது அரசு வழங்கும் இழப்பீடு தொகை, சந்தை விலையை விட மிகக் குறைவாக உள்ளதுடன், அது வந்து சேருவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.கால்நடை மருத்துவர்களின் ஆய்வின்படி, தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப முழு இழப்பீடை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும். தெருநாய்களின் தொல்லை முற்றிலும் ஒழியும் வரை, இந்த இழப்பீடை தொடர்ந்து வழங்குவதற்கான நிரந்தர அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகைகளையும் விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement