ஏர்போர்ட்டில் 'ஐ-போன்' மாயம்: ஜி.பி.எஸ்., கருவியால் மீட்பு

மீனம்பாக்கம: விமான நிலையத்தில் தொலைத்த ஆந்திர நபரின் ஐ-போன், ஜி.பி.எஸ்., எனும் இருப்பிடம் காட்டும் கருவியின் உதவியுடன், போலீசார் மீட்டனர்.

ஆந்திர மாநிலம், பம்மிடிமுக்கலா, கபாலீஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காகர்லா மனிஷ், 28. கடந்த, 29ம் தேதி இரவு, சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்த இவர், 1.20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 'ஐ-போன்' மொபைல் போனை தவறவிட்டார். இதுகுறித்த அவரது புகாரையடுத்து, மீனம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தவறவிட்ட போனில் ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப உதவியுடன் மொபைல் போனை, போலீசார் டிராக் செய்தனர். அது எழும்பூர் ரயில் நிலையத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் சிக்னல் காட்டிய இடத்தில் நின்றவரை பிடித்து, போலீசார் சோதனையிட்டபோது, ஐ-போன் சிக்கியது.

விசாரணையில், மீனம்பாக்கம் சிக்னல் பகுதியில் மொபைல் போனை கண்டெடுத்ததாக, அந்நபர் தெரிவித்தார். ஐ-போனை மீட்ட போலீசார், மனிஷிடம் ஒப்படைத்தனர்.

Advertisement