முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக்க வேண்டும்

மதுரை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. தேர்தலின் போது சொன்ன வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். ரூ.30 கோடியில் அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கலாம் என்பதால் ஆலை திறப்பு தேதியை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும்.

பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 20 ஆண்டுகளானது. தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பேபி அணை பலப்படுத்துவதற்கான எந்த வேலையும் நடக்காததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்ட கேரள அரசு அனுமதிக்கவில்லை. தனிக்குழு அமைத்து மத்திய, கேரள அரசுகள் மூலம் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். உரம், இதர இடுபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மானியம், கடன் திட்டங்களை தமிழக அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement