கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு தாராளம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதியில் சமீபகாலமாக கூம்பு வடிவ ஒலிபெருக்கி குழாய்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிகாலை முதல் இரவு வரை கட்டுப்பாடு இன்றி சப்தமிடும் கூம்பு வடிவ குழாய்கள் பல நேரங்களில் பொது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. விசேஷ வீடுகளில் மைக் செட் அமைத்து பாடல்கள் ஒலிபரப்ப அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் முன் அனுமதி பெற வேண்டும்.

கூம்பு வடிவ குழாய்கள் பயன்பாட்டிற்கு அனுமதி இல்லாததால் அதிக திறன் கொண்ட ஸ்பீக்கர்களை கூடுதல் எண்ணிக்கையில் பயன்படுத்துகின்றனர். மெயின் ரோடுகள் வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் அதிக சத்தத்துடன் வரும் ஒலி பலருக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. உயரமான மரங்கள், மேல்நிலை தொட்டிகள், தனியார் வீடுகளின் மாடிகளில் கட்டப்படும் கூம்பு வடிவ குழாய்கள் தூரத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. காதை செவிடாக்கும் ஒலியால் பொதுமக்கள் அவதிப்பட்டாலும் இது குறித்து யாரும் புகார் கொடுப்பதில்லை.

இதனை சாதகமாக்கிக் கொண்ட மைக் செட் உரிமையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்வதை தொடர்கின்றனர். கூம்பு வடிவ குழாய்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் மைக்செட் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement