எம்.எல்.ஏ.,க்கள் போலி கையெழுத்து கடிதம் :சி.ஐ.டி., பிடியில் மம்தா மருமகன் அபிஷேக்
கொல்கட்டா;மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேர்வுக்கான கடிதத்தில், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை போலியாக போட்டதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.ஐ.டி., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முதன்முறையாக ஆட்சியை பா.ஜ., கைப்பற்றியது. அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார். தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 6ம் தேதி மாலை, திரிணமுல் காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் வீட்டில், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. அப்போது, திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,யும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்துகளை கேட்டார்.
எதிர்க்கட்சி தலைவராக, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., சோபன்தேவ் சட்டோபாத்யாயாவை நியமிக்க ஆதரவு அளித்து, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதம் சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், திரிணமுல் காங்., மூத்த தலைவர் நயனா பானர்ஜி, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கும் போது கையெழுத்திட்டதற்கும், ஆதரவு கடிதத்தில் உள்ள அவரின் கையெழுத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறி, ஹரே தெரு போலீஸ் ஸ்டேஷனில், சட்டசபை செயலர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நயனா பானர்ஜி, சந்திரனாத் சின்ஹா, குணால் கோஷ், பஹருல் இஸ்லாம் ஆகியோரிடம் சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு விவகாரத்தில் கட்சியின் எம்.பி., அபிஷேக் பானர்ஜியின் தலையீடே அதிகம் இருந்தது தெரிய வந்ததால், அவரிடமும் விசாரணை நடத்த சி.ஐ.டி., அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சம்மன் வழங்குவதற்காக கொல்கட்டாவின் ஹரிஷ் முகர்ஜி சாலையில் உள்ள அபிஷேக் பானர்ஜியின் வீட்டிற்கு சி.ஐ.டி., அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கு அவர் இல்லாததால், காளிகாட் சாலையில் உள்ள மற்றொரு வீட்டிற்கு நேரில் சென்று அதிகாரிகள் சம்மன் வழங்கினர். அதில், நாளை மதியம் 12:00 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இதை பெற்ற அபிஷேக் பானர்ஜி, ''அரசியல் பழிவாங்கும் நோக்கில், எனக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என, பல விசாரணை முகமைகளின் விசாரணைகளை சந்தித்து இருக்கிறேன். தற்போதைய விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு தருவேன். எங்கும் ஓடி ஒளிய மாட்டேன்,'' என்றார்.
@block_B@ முட்டை, கல்வீச்சு தாக்குதல் உள்ளூர்வாசிகள் ஆவேசம் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட திரிணமுல் காங்., தொண்டர் சஞ்சு கர்மாகர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, அபிஷேக் பானர்ஜி நேற்று சோனார்பூர் தெற்கு பகுதிக்கு சென்றார். அங்கு திரண்ட உள்ளூர் மக்கள் அவரது காரை முற்றுகையிட்டு, ஹிந்தி மற்றும் வங்க மொழியில், 'திருடன்... திருடன்...' என முழக்கமிட்டனர். மேலும், கற்கள், காலணிகள் மற்றும் முட்டைகளை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த பாதுகாவலர்கள், அபிஷேக் பானர்ஜியின் தலையில் தலைகவசத்தை அணிவித்து, அங்கிருந்து அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால், சோனார்பூர் தெற்கு பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.block_B
மேலும்
-
அவசர மருத்துவ உதவி அழைப்பு சேவையில் கடலுார் மாவட்டம்... முதலிடம்:ஏப்ரல் மாதத்தில், 8,117 பேருக்கு உதவி அசத்தல்
-
அமைச்சர்களை நியமிக்காவிட்டால் போராட்டம்: த.வெ.க., எம்.எல்.ஏ., அறிவிப்பு
-
உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
-
பவுர்ணமி பூஜை
-
கம்பத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
-
வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை திருட்டு