வெப்பம் கடுமையாக இருப்பதால் கூடுதல் கவனம் அவசியம்; மன்கி பாத்தில் பிரதமர் மோடி அட்வைஸ்

6

புதுடில்லி: வெப்பம் கடுமையாக இருப்பதால் கூடுதல் கவனம் அவசியம்; வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால், கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து இருப்பதை கவனித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால், மிகுந்த எச்சரிக்கையுடனும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு செல்லுங்கள்.

செப்பு தகடுகள்




சமீபத்தில், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்துக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்கு பல கூட்டங்களில் கலந்துகொண்டேன். அப்போது, ​​ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு தருணம் அமைந்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், சோழர் காலத்தைச் சேர்ந்த பழங்கால செப்புத் தகடுகள் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

இவ்விழாவில் நெதர்லாந்து பிரதமரும் கலந்துகொண்டார். இந்தச் செப்பேடுகள் தொடர்பாக, இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் எனக்குத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன், பெருமித உணர்வையும் தெரிவித்து வருகின்றனர்.உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையேயும் ஒரு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.சோழ வம்சத்தின் சாதனைகள் குறித்த விளக்கங்களும் இச்செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளன.

நெதர்லாந்தில் சோழ மன்னர்களுடன் தொடர்புடைய 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகள் உள்ளன. ஆனைமங்கலம் செப்பேடுகளை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. சோழர்களின் கடல் சாம்ராஜ்யம் எவ்வளவு வலிமையாக இருந்தது என்பதை காட்டும் வகையில் செப்பேடுகள் அமைந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான சோழர்களின் உறவுகள் குறித்த தகவலும் அதில் அடங்கியுள்ளன.

மா விவசாயிகளுக்கு...




மா சாகுபட்டில் ஈடுபட்டுள்ள விவாசாயிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நீங்கள் வெறும் சாதாரண மா விவசாயிகள் அல்ல; நீங்கள் உண்மையிலேயே மிகச் சிறந்தவர்கள். இதேபோல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவில், கோடைக்காலத்தில் மாம்பழங்களைப் பற்றிப் பேச்சு எழாத வீடு என்று ஒன்றுமே இல்லை. அதற்கே மாம்பழம் மிகுந்த சுவையுடன் நறுமணம் கொண்டது.

உத்வேகம்




ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த தேசிய முதுநிலைத் தடகளப் போட்டிகளில் புதிய சாதனைகளை படைத்த குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ் மீணா குல்தீப் குமார் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டு வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றனர்.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும், நம்மை ஊக்கப்படுத்தும் ஏதேனும் ஒரு செயல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலும், இத்தகைய முயற்சிகள் பரவலாகப் பேசப்படுவதில்லை. அவற்றை நாம் அறிய வரும்போது, நாடு முன்னேறிச் செல்கிறது எனும் நம் நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.

இத்தகைய முயற்சிகளை நீங்கள் அவசியம் தேடி அறிய வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். சமூகத்திற்கு நற்பணிகளை ஆற்றிவரும் மக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்; அவர்களைப் பாராட்டுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; இயலுமென்றால், நீங்களும் ஏதேனும் ஒரு நற்பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement