தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஜாதி விரோதத்தில் அரிவாளால் வெட்டி தப்பிய கும்பல்

1

திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஜாதி முன்விரோதத்தில் அடுத்தடுத்து 9 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவங்களில் தொடர்புடைய 3 சிறார்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதிகளைச் சேர்ந்த ஒரே கும்பல், தங்களுடன் முன்விரோதம் கொண்ட சமூகத்தினரை தாக்க திட்டமிட்டது.

மே 28- பிரம்மதேசத்தில் மணிகண்டன் 28, என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. பின்னர் செல்வகணேசனின் சிற்பக்கூடத்திற்குச் சென்று ஊழியரை தாக்கி அலைபேசியை பறித்துச் சென்றது.

மறுநாள் (மே 29) இரவு அதே கும்பல் 5 இருசக்கர வாகனங்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூருக்கு சென்று அங்கு பட்டியலின மக்களை குறிவைத்து தாக்கியது. இதில் அருள்மாறன், சந்தோஷ்குமார், ராயப்பன், அமல்ராஜ், ரமேஷ், ராம்குமார் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பின்னர் அதே கும்பல் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டிக்கு சென்று தங்கள் வாகனங்கள் வேகமாக சென்றது குறித்து கேட்ட முபாரக் 30, அப்துல் ரகுமான் 30, ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடந்த இந்த நான்கு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது.

குற்றவாளிகளை பிடிக்க போலீசார் காடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். ட்ரோன் கேமரா உதவியுடன் பதுங்கியிருந்தவர்களை கண்டுபிடித்து 3 சிறார்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். இவர்களில் சிலர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

நெட்டூரைச் சேர்ந்த இசக்கிமுத்து 19, பிரம்மதேசத்தைச் சேர்ந்த நாலாயிரமுத்து என்ற நவீன் 19, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளவுத்துறை செயல்பாடு தோல்வி

பிரம்மதேசத்தில் மே 28 ல் நடந்த தாக்குதல், அலைபேசி பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் அன்றே தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால், மறுநாள் நெட்டூரில் தாக்குதல் நடக்காமல் தடுத்திருக்கலாம்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக நாங்குநேரி பகுதியில் இதே போல எட்டு பேர் கும்பல் டூவீலர்களில் சென்று பெரும்பத்து கிராமத்தில் ரோட்டோரம் நின்றவர்களை அரிவாளால் வெட்டியதில் ஒரு வட மாநில தொழிலாளி உட்பட இருவர் இறந்தனர். ஆறு பேர் காயமுற்றனர். இச்சம்பவத்திலும் அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். அதிலும் பட்டியல் இனத்தவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

நாங்குநேரி அருகே நடந்த சம்பவத்தை போலவே தற்போதும் இந்த கும்பல் 3 டூவீலர்களை திருடி அதன் நம்பர் பிளேடுகளை கழட்டியுள்ளனர். எனவே இந்த சம்பவங்களை குடிபோதையில் நடந்தது என தவிர்க்க முடியாது. திட்டமிட்டே நடந்துள்ளது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி., பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement