கூடலுார் ஏரிக்கரை சாலையில் 'கரணம் தப்பினால் மரணம்'

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கூடலுார் ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் இல்லாததால், சிறு விபத்து ஏற்பட்டாலும் உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலைமை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

மறைமலை நகர் நகராட்சி கூடலுார் ஏரிக்கரை, 2 கி.மீ., துாரம் உள்ளது. மட்டண ஓடை, கோகுலாபுரம், கருநிலம் உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலை நகர் வந்து செல்ல, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் தங்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

கூடலுார் ஏரிக்கரை கலங்கல் பகுதியில் சாலை வளைவு உள்ளது.

சாலையோரம் இரும்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகை ஏதும் இல்லாததால், வாகன ஓட்டிகள் 'கரணம் தப்பினால் மரணம்' என்ற பழமொழிக்கு ஏற்ப சிறு விபத்து ஏற்பட்டாலும், உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலைமை உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலையில் மூன்று இடங்களில் முக்கிய வளைவுகள் உள்ளன.

வேகமாக வரும் புதிய வாகன ஓட்டிகள் சாலை ஓரம் தடுப்புகள் இல்லாததால், விபத்துக்களில் சிக்கிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை. பெரும் விபத்து ஏற்படும்முன், இந்த பகுதியில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement