இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது

பிரிஸ்டோல்: இரண்டாவது 'டி-20' போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. பிரிஸ்டோலில் 2வது போட்டி நடந்தது.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு டேனி வயாட்-ஹாட்ஜ் (29), அமி ஜோன்ஸ் (28), ஆலிஸ் கேப்சி (28) ஓரளவு கைகொடுத்தனர். ஹீதர் நைட் (18) நிலைக்கவில்லை. பிரேயா ஹெம்ப் 13 பந்தில், 39* ரன் (2X6, 4X4) விளாசினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 168/5 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா (22), ஸ்மிருதி மந்தனா (32) நல்ல துவக்கம் கொடுத்தனர். அபாரமாக ஆடிய யஷ்திகா பாட்யா (33) 'ரிட்டையர்டு அவுட்' ஆனார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1), ரிச்சா கோஷ் (8) ஏமாற்றினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (28) ஓரளவு கைகொடுத்தார். தீப்தி சர்மா (2) சோபிக்கவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டன. சோபி எக்லெஸ்டோன் பந்துவீசினார். ஷ்ரேயங்கா பாட்டீல் (6), ஸ்ரீ சரணி (1) அவுட்டாகினர். இந்த ஓவரில் 5 ரன் மட்டும் கிடைத்தது. இந்திய அணி 20 ஓவரில் 142/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி ஜூன் 2ல் டான்டனில் நடக்கவுள்ளது.

Advertisement