விதிகளை மீறி செயல்படும் செங்கல் தொழிற்சாலைகள்

கீழடி:கீழடியைச் சுற்றிலும் உள்ள சில செங்கல் சேம்பர், காளவாசல் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் புகையால் பொதுமக்கள், கால்நடைகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கீழடியைச் சுற்றிலும் மணலுார், கொந்தகை, பாட்டம், அகரம், பொட்டப்பாளையம், புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் செங்கல் தொழிற்சாலைகள், காளவாசல் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் எல்லையில் செயல்பட்டு வரும் சில நிறுவனங்களில் மாசு கட்டுப்பாடு விதிகளை பின்பற்றப்படுவதே இல்லை. விதிகளை மீறி இயங்கி வரும் இவற்றில் இருந்து அளவிற்கு அதிகமான கரும்புகை வெளியேறி வருகிறது.

செங்கல் தொழிற்சாலைகளில் பனை, தென்னை மரங்கள், கருவேல மர வேர்க்கட்டைகளை பயன்படுத்துவதால் அடர்த்தியான புகை கிளம்புகிறது. செங்கல் தொழிற்சாலைகளில் குறிப்பட்ட உயரத்திற்கு மேல் புகை போக்கி இருந்தால் மட்டுமே புகை வானில் சென்ற கரைந்து விடும், ஆனால் பெயரளவில் உள்ள புகை போக்கியால் எந்த வித பயனும் இன்றி புகை தரைமட்டத்திலேயே பரவுகிறது.

இந்த அடர்த்தியான கரும்புகை மரங்கள், புற்கள், நீர் நிலைகள் மேல் அப்படியே படிகிறது. இதனால் ஆடு, மாடு உள்ளிட்டவைகள் உணவு உண்ண முடியாமலும், தண்ணீரை அருந்த மடியாமலும் தவிக்கின்றன. செங்கல் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை புகையில் வெளியாகும் கார்பன் அளவை கணக்கிட்டு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும், நடைமுறையில் இதுபோல எந்த வித ஆய்வும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.பெரும்பாலான செங்கல் தொழிற்சாலைகள், காளவாசல்கள் மாவட்டத்தின் எல்லையில் இருப்பதால் சிவகங்கை மாவட்ட மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்விற்கு வருவதே இல்லை.

தற்போது கடும் கோடை காலம் என்பதாலும் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடப்பதால் செங்கற்கள் தேவை அதிகம், எனவே 24 மணி நேரமும் செங்கல் தயாரிப்பு பணிகள் நடந்த வண்ணம் இருப்பதால் அடர்த்தியான புகை வெளியேறியபடியே உள்ளது. அடர்த்தியான புகை கீழடியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகம், திறந்த வெளி அருங்காட்சியகத்தில் உள்ள பண்டைய கால பொருட்கள் மீதும் படிவதால் அவற்றின் நிறமும் மாற வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கீழடியைச் சுற்றியுள்ள செங்கல் தொழிற்சாலைகள் காளவாசல்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement